லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகை மகாலக்ஷ்மி பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் சஞ்சய் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை” என்றார்.
கலை இயக்குநர் பெஞ்சமின் பேசுகையில், “சஞ்சய் என்னிடம் சொன்ன கதையை எப்படி சொன்னாரோ, அதே உணர்வுடன் படமாக்கியிருக்கிறார். நானும் எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். என்னுடன் பணியாற்றிய எனது அணியினருக்கு நன்றி” என்றார்.
நடிகர் அன்புதாசன் பேசுகையில், “இந்தப் படத்தில் கே.ஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு வழங்கிய சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் ஷிவ் பண்டிட் பேசுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட உழைப்பிற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய சஞ்சய் மற்றும் லைகா நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.
நடிகை ஃபரியா அப்துல்லா பேசுகையில், “ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. படம் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தமிழ்குமரன் பேசுகையில், “சஞ்சய் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இனிமேல் ‘சிக்மா’ உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் சஞ்சயை இயக்குநராக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடன் பயணித்த லைகா நிறுவனத்திற்கும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ‘சிக்மா’ படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெளியான பிறகுதான் தொடர்ந்து நடிப்பதா அல்லது இயக்கத்தில் கவனம் செலுத்துவதா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த என் அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் என்னை வாழ்த்தினர்” என்றார்.