ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ப்ளாக் ஹோல் எனப்படும் மர்மமான இடத்துக்குள் நுழையும் மூவர், அது குறித்து விசாரணை நடத்தும் காவல் அதிகாரி, சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே நடைபெறும் மோதல் என வித்தியாசமான கற்பனை அம்சங்களுடன் உருவாகியுள்ளது ‘டிரோன்ஸ்’. ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிய அம்சங்களுடன் காமெடியையும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், மர்மமும் சுவாரஸ்யமும் நிறைந்த ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மர்மமான கதாபாத்திரங்கள், மாயாஜாலக் காட்சிகள், விறுவிறுப்பான சம்பவங்கள் என வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட களத்தில் பயணிக்கும் வகையில் ‘டிரோன்ஸ்’ உருவாகியுள்ளது.
படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், சிவப்பு நிற ஆடையில் சூனியக்காரியைப் போன்ற தோற்றத்தில் ஒரு பெண்ணும், வெள்ளை நிற ஆடையில் தேவதையைப் போன்ற தோற்றத்தில் மற்றொரு பெண்ணும் நேருக்கு நேர் மோதுவது போல் இடம்பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையே வெளிப்படும் மாயாஜால சக்திகளும், ‘விட்ச் Vs ஏஞ்சல்’ என்ற மோதலும் படத்தின் ஃபேண்டஸி உலகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கெனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் புதிய போஸ்டரும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் ராகவ் மிர்தாத். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி S.R. இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் இப்படத்தை வெளியிடுகிறார். தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் ‘டிரோன்ஸ்’, ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்துள்ளதால், அனைத்து தரப்பினரையும் கவரும் வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.