E 1 விமர்சனம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், அதனை மையமாக வைத்து சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘E1’. சதா நாடார் குமார் மற்றும் மோனிகா செலினா இணைந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இப்படம், ஒரு பரபரப்பான கதையைச் சொல்வதுடன் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தையும் பதிவு செய்கிறது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவன் மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார் மோனிகா செலினா. வேலை காரணமாக கணவன் வெளியூர் சென்றுவிட, கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருக்கும் அவருக்கு, இரவு நேரத்தில் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. திடீரென மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைய, ஏற்கனவே தனிமையில் இருக்கும் அவருடைய பயமும் பதற்றமும் அதிகரிக்கிறது. இதற்கிடையே அதே வீட்டிற்குள் ஒரு பிணமும் இருப்பது தெரியவர, அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்ற குழப்பம் உருவாகிறது. வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம நபர் யார்? அவருக்கும் அந்தப் பிணத்திற்கும் என்ன தொடர்பு? கைக்குழந்தையுடன் தனியாக இருக்கும் பெண் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்தாரா? என்ற கேள்விகளுக்கான பதில்களை நோக்கி கதை நகர்கிறது.

ஒரே வீட்டை மையமாக வைத்து, குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களுடன் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை நகர்த்துவது சவாலான விஷயம். அந்தச் சவாலை சதா நாடார் குமார் மற்றும் மோனிகா செலினா இருவரும் இயக்குநர்களாக சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் தனிமை மற்றும் அச்சத்தை மையமாக வைத்து மெதுவாக நகரும் திரைக்கதை, மர்ம நபரின் வருகைக்குப் பிறகு வேகம் பெறுகிறது. அடுத்தடுத்து வெளிப்படும் சம்பவங்கள் மற்றும் அந்த நபரின் பின்னணியில் இருக்கும் உண்மைகள் மூலம் திரில்லர் அனுபவத்தை உருவாக்கியிருப்பதுடன், அதன் வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சமூக அக்கறையையும் பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்காக காட்சிகளை வைக்காமல், கதையின் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் கருத்தை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. மேலும், 75 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் படத்தின் குறுகிய கால அளவும் கதையின் விறுவிறுப்புக்கு உதவுகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதா நாடார் குமார், ஆரம்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் கொலைகாரனாகவும், பின்னர் தனது செயல்களுக்கான காரணத்தை வெளிப்படுத்தும் தருணங்களில் உணர்வுப்பூர்வமான மனிதராகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, அவரது கதாபாத்திரத்தின் பின்னணியில் இருக்கும் வலியை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்துள்ள மோனிகா செலினா படத்தின் முக்கிய பலமாக இருக்கிறார். கணவன் இல்லாத நேரத்தில் கைக்குழந்தையுடன் தனியாக இருக்கும் பெண்ணின் பயம், பதற்றம், தவிப்பு மற்றும் இயலாமை ஆகியவற்றை தனது முகபாவனைகள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களிடம் கடத்துகிறார். இவர்களுடன் பாண்டி, சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரம் பேபி ஷிவ் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இ.ஜே. ஜான்சனின் இசை, படத்தின் சஸ்பென்ஸ் மற்றும் பதற்றமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக பின்னணி இசை, மர்மமான சூழலைத் தக்கவைக்க உதவுகிறது. எம்.எஸ். மனோகுமாரின் ஒளிப்பதிவு, ஒரே வீட்டிற்குள் நடைபெறும் கதையை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து, அந்த இடத்தின் தனிமையையும் அச்சத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. இரவு நேரக் காட்சிகளும் படத்தின் திரில்லர் தன்மையை அதிகரிக்கின்றன. பரணி செல்வத்தின் படத்தொகுப்பு, தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து கதையை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது. ஆனந்தனின் கலை இயக்கமும் கதைக்களத்திற்குத் தேவையான சூழலை உருவாக்குகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களை வெறும் செய்தியாகக் கடந்து செல்லாமல், அதன் பின்னால் இருக்கும் வலியையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வர முயன்றிருக்கிறது ‘E1’. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் அனுபவத்துடன் சமூக அக்கறையையும் இணைத்து, குறுகிய நேரத்தில் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்லியிருப்பதே இப்படத்தின் சிறப்பு. கதைக்கான வெளிச்சம் இன்னும் சற்று சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பதே படத்தில் தென்படும் ஒரே குறை.

மொத்தத்தில், குறைந்த கதாபாத்திரங்கள் மற்றும் குறுகிய கால அளவை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கதையை உருவாக்கி, அதனுடன் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கும் ‘E1’, கவனிக்கத்தக்க ஒரு முயற்சி.

Read Previous

டிரோன்ஸ் – டிரைலர்