ஹைக்கூ – காதலைக் கடந்தும் பேசும் கதை

‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர். டி. அருளானந்தம் தயாரித்துள்ள மூன்றாவது திரைப்படம் ‘ஹைகூ’. ஏகன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்ய, சக்தி பிரணேஷ்.பி படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். பிரேம் கருந்தமலை கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ‘ஹைகூ’, அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆணாக கதாநாயகன் படிக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் டாக்டர். டி. அருளானந்தம், கதாநாயகன் ஏகன் மற்றும் கதாநாயகி ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் ‘ஹைகூ’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் டிரைலரில் இடம்பெற்றுள்ள முக்கிய காட்சிகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர். டி. அருளானந்தம் பேசுகையில், “இந்தப் படத்தின் கதை ஒரு கவிதையைப் போன்றது. இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கதையை சொல்லத் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே இப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ‘ஜோ’ படத்தின் கதையைக் கேட்டபோதும் இதே உணர்வு தான் ஏற்பட்டது.

டிரைலரில் இடம்பெறும் மகளிர் கல்லூரியில் கதாநாயகன் படிக்கும் காட்சி, இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பும். ஆனால் படத்தைப் பார்க்கும்போது, இதுவும் நடக்கக்கூடிய விஷயம் தான் என்று தோன்றும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த சம்பவம் மட்டுமே ‘ஹைகூ’ அல்ல. அதைத் தாண்டி பல விஷயங்களை உள்ளடக்கிய கதையாக படம் உருவாகியுள்ளது.

எனக்கு சினிமா குறித்து பெரிய தொழில்நுட்ப அறிவு கிடையாது. 14 வயதில் இருந்தே நிறைய திரைப்படங்களை பார்த்து வருகிறேன். ஒரு படம் நன்றாக இருக்கிறது, இல்லை என்பதை உணர்ந்து கொள்வேன். அவ்வளவு தான் எனக்கு சினிமா தெரியும். அந்த வகையில் இந்த கதையை கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஒரு இளைஞனின் 19 வயது முதல் 26 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டது இப்படம். சமீபகால காதல் படங்களில் இருந்து ‘ஹைகூ’ வேறுபடுவதற்கு அதன் கதையே முக்கிய காரணம். படத்தில் இடம்பெறும் வெவ்வேறு சம்பவங்கள் வெவ்வேறு வயதினருடன் தொடர்பை ஏற்படுத்தும். 45 வயதுடைய ஒருவரை ஒரு சம்பவம் கவரலாம், மற்றொரு சம்பவம் வேறு வயதினருடன் தொடர்பை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் தங்களுடைய வாழ்க்கையுடன் இப்படத்தை தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.

நான் தயாரித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘ஹைகூ’. ‘ஜோ’ படத்தை சுமார் ரூ.4 கோடி செலவில் தயாரித்தோம். ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் தயாரிப்பு செலவு அதைவிட இரண்டு மடங்கு அதிகமானது. ‘ஹைகூ’ படத்தை ரூ.6 கோடியில் முடித்திருக்க முடியும். ஆனால் கதையின் மீது இருந்த நம்பிக்கையால் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து சுமார் ரூ.11 கோடி செலவில் தயாரித்துள்ளேன்.

இந்தக் கதையைக் கேட்டபோதே படத்திற்கு தனி வியாபாரம் இருப்பதை உணர்ந்தேன். தற்போது அது நடைமுறையிலும் நிரூபணமாகியுள்ளது. கதையை மட்டுமே கேட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது. சாட்டிலைட் உரிமையும் விற்பனையாகிவிட்டது. படத்தின் பாடல் உரிமையை சரிகமா நிறுவனம் பெரிய தொகைக்கு பெற்றுள்ளது.

‘ஜோ’ படத்தின் பாடல்களுக்காக சுமார் ரூ.60 லட்சம் செலவு செய்திருந்தேன். அந்தப் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் ‘ஹைகூ’ படத்தின் பாடல்களுக்காக ரூ.1.25 கோடி செலவு செய்திருக்கிறேன். அந்த அளவுக்கு பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன.

இதுவரை படத்தைப் பார்த்த அனைவருமே இது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றும், படத்திற்காக செய்யப்பட்ட செலவு திரையில் தெரிகிறது என்றும் கூறியுள்ளனர். இதுவரை நான் செய்த முதலீட்டில் சுமார் 80 சதவீதம் ஏற்கனவே வந்துவிட்டது. இது எனக்கும், இந்தப் படத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி.

என்னுடைய முந்தைய படங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. சினிமாவை வெறும் தொழிலாகப் பார்க்காமல், அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறேன். அந்த வகையில் ‘ஹைகூ’ படத்தின் மூலம் நான் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.

கதாநாயகன் ஏகன் பேசுகையில், “இந்தப் படத்தில் மனோகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். டிரைலரில் இடம்பெற்றுள்ள மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் படிக்கும் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு மாணவருக்கு வழங்கப்படும் தண்டனையாக அந்த சூழல் உருவாகிறது.

படத்தைப் பார்க்கும்போது, அந்த தவறை செய்திருக்க வேண்டாமே என்று ஒரு கட்டத்தில் தோன்றும். அதே நேரத்தில் அந்த தவறுக்கான தண்டனையை பார்க்கும்போது இப்படியுமா தண்டனை கொடுப்பார்கள் என்ற எண்ணமும் ஏற்படும்.

காதலைத் தாண்டி பல விஷயங்களை பேசும் படமாக ‘ஹைகூ’ இருக்கும். காதலிக்கும் இளம் வயதினரை மட்டுமல்லாமல், திருமணமாகி பல ஆண்டுகள் ஒன்றாக வாழும் தம்பதிகளையும் இப்படம் யோசிக்க வைக்கும். நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை இப்படிச் செய்திருக்கக் கூடாதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

கதையை கேட்டபோதே எனக்கு இந்த உணர்வு ஏற்பட்டது. படமாக பார்த்தபோதும் அதே உணர்வு தான் இருந்தது. நாம் நல்ல கதையைத் தேர்வு செய்திருக்கிறோம் என்ற நம்பிக்கை அப்போதே வந்துவிட்டது. காதல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே உரியதல்ல. திருமணமானவர்களிடமும் காதல் தொடர்ந்து இருக்கும். எனவே, அனைத்து தலைமுறையினருக்குமான படமாக ‘ஹைகூ’ இருக்கும்,” என்றார்.

கதாநாயகி ஃபெமினா ஜார்ஜ் பேசுகையில், “நான் ஏற்கனவே ‘மின்னல் முரளி’ படத்தில் நடித்துள்ளேன். ‘ஹைகூ’ படத்தின் கதையை கேட்க என்னை அழைத்தபோது, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக நடிக்க சம்மதித்தேன்.

என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்தால் என்னுடைய சினிமா பயணத்திற்கு நல்ல மாற்றம் கிடைக்கும் என்று தோன்றியது. தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாவது எனக்கு பெருமையாக இருக்கிறது.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது, அதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதையே பார்க்கிறேன். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் இருந்தால் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.

அந்த வகையில் ‘ஹைகூ’ படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது. இரண்டு கதாநாயகிகள் என்பதற்காக நான் தயங்கவில்லை. மூன்று கதாநாயகிகள் இருந்திருந்தாலும் கதாபாத்திரம் பிடித்திருந்தால் நடித்திருப்பேன்,” என்றார்.

Read Previous

அன்பில் அவன் – நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி

Read Next

ஹைக்கூ – டிரைலர்