தமிழ்த் திரையுலகில் சமீப காலத்தில் அதிகப்படியான விளம்பரமே செய்யாமல் ஒரு படம் வசூலைக் குவித்து வருகிறதென்று சொன்னால் அது ‘தனி ஒருவன்’ படமாகத்தான் இருக்கும்.
சிறிய படங்களுக்குக் கூட இந்தக் காலத்தில் பெரிதாக விளம்பரங்கள் தேவைப்படும் நிலையில் இந்தப் படத்தை பெரிதாக விளம்பரப்படுத்தவில்லை. ஜெயம் ரவி நடித்த இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னர் வந்த ‘சகலகலா வல்லவன்’ படம் சுமாராகத்தான் ஓடியது.
இருந்தாலும் ‘தனி ஒருவன்’ படம் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் அந்தப் படத்தை அமோகமாக வரவேற்றனர்.
இப்போது படத்தின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களின்படி தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்கள் இருவர் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி போடுகிறார்களாம்.
சுமார் 9 கோடி வரை தர அவர்கள் தயாராக இருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி உரிமையும் அந்த அளவிற்கு விலை போனால் படத்தின் தயாரிப்புச் செலவை இதிலேயே எடுத்து விடலாமே என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.