தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவிக்கும் அளவிலான படங்கள் வருவது அபூர்வமாகி வருகிறது.
பெயர் வாங்க வேண்டும் என்பதையும் மீறி, வசூல் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே தற்போது பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் பார்த்த வேலையை விட்டுவிட்டு ‘கனவு வாரியம்’ படத்தை இயக்கி, நடித்து சில சர்வதேச விருதுகளையும் வாங்கியிருக்கிறார் இயக்குனர் அருண் சிதம்பரம்.
தென் தமிழகத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் அருண் சிதம்பரம் 8வது படிப்பைக் கூடத் தாண்டாதவர். அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர், எதையாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படிப்பை விட்டு ரேடியோ மெக்கானிக் ஆக மாறுகிறார். இளைஞனான பிறகும் பல புதிய விஷயங்களைச் செய்து பார்க்கும் ஆர்வத்துடன் இருக்கிறார். அப்படிப்பட்டவரை ஊரே கிறுக்கன் என்று சொல்கிறது.
தன் கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதைப் பார்த்து தானே சொந்தமாக காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க முயற்சிக்கிறார். அதன் மூலம் தன் கிராமத்திற்கே மின்சாரம் கொடுக்க முடியும் என கனவு காண்கிறார். அவருடைய கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே இந்த ‘கனவு வாரியம்’.
கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார் அருண் சிதம்பரம். இயக்கத்திலும், நடிப்பிலும் இதுதான் அவருடைய முதல் படம் என்று சொல்ல முடியாதபடி யதார்த்தமாக உழைத்திருக்கிறார். சினிமாத்தனமில்லாத காட்சிகள் படத்தில் நிறையவே இருக்கின்றன. கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதையும், சில காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கனவு வாரியத்தின் மீது இன்னும் அதிக ஒளி வீசியிருக்கும்.
அருண் சிதம்பரத்திற்குப் பிறகு அவருடைய அப்பா இளவரசு மனதில் நிற்கிறார். 20 வருடங்களுக்கு முன்பே படிப்பே வேண்டாம் என ஒரு மகன் சொல்லும் போது கிராமத்து அப்பா என்ன சொல்லியருப்பார். ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருப்பார். ஆனால், இந்த அப்பா மகனின் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் குறுக்கே நிற்காமல் அதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறார்.
அருண் சிதம்பரத்தின் நண்பராக வரும் பிளாக் பாண்டி, அடிக்கடி சுவாரசியமான கமெண்ட் அடித்து சிரிக்க வைக்கிறார். இயற்கை விவசாயத்தில் கஷ்டப்பட்டு வெற்றி பெறுபவராக யோக் ஜபியும் நிறைவு.
அருண் சிதம்பரத்தின் கனவுகளுக்கு உறுதுணையாக காதலியாக ஜியா சங்கர். முடிந்தவரை நடிக்க முயற்சித்திருக்கிறார்.
ஓய்வு பெற்ற ஆசிரியராக நடித்திருக்கும் ஞானசம்பந்தன், அருண் சிதம்பரத்தின் அம்மாவாக செந்தி ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷ்யாம் பெஞ்சமின் ‘கல்லா மண்ணா…’ பாடலில் அதிகம் ஈர்க்கிறார். ஆனால், பின்னணி இசையில் ஏதோ நாடகத்திற்கு இசையமைப்பதைப் போல வாசித்துத் தள்ளியிருக்கிறார்.
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இந்த கனவு வாரியத்தைக் கொடுத்தற்காக இயக்குனரைப் பாராட்டலாம். அதே சமயம் படத்தின் நீளத்திலும், கிளைமாக்சை சட்டென முடிப்பதிலும் இன்னும் யோசித்து காட்சிகளை அமைத்திருக்கலாம்.