‘ஒரு முகத்திரை’ படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தவர் சுரேஸ்.
படத்தில் தேவிகாவைக் காதலித்து அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செல்பவர், மனநல மருத்துவர் ரகுமானால் குணமாக்கப்பட்டு, பின்னர் அவருக்காகவே ஒரு கொலையையும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
படத்தைப் பார்த்த பலரும் தன்னை வெகுவாகப் பாராட்டியதாகக் கூறுகிறார் சுரேஸ்.
“ஒரு முகத்திரை’ படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பலரும் நான் நன்றாக நடித்திருப்பதாகச் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்து நடித்தேன். முதலில் ஐ.டி. கம்பெனி எச்.ஆர்-ஆக இருக்கும் நான் பின்னர் காதல் தோல்வியால் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பேன்.
அதற்காக என்னை முடியை நன்றாக வளர்க்க வேண்டும் என்று இயக்குனர் கூறியிருந்தார். எனக்கு முடி வளரும் வரை காத்திருந்து படமாக்கினார். முடிதானே என்று இல்லாமல் அனைத்துமே இயல்பாக இருக்க வேண்டும் என்று படமாக்கினோம்.
மலேசியாவில் பல தமிழ்ப் படங்களையும், ஆங்கிலப் படங்களையும் எங்களது குடும்பத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். திரைப்படப் பின்னணியுடன் வளர்ந்ததால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
அடுத்து அஜித் நடித்த ‘ஆழ்வார்’ படத்தை இயக்கிய செல்லா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது,” என்கிறார் சுரேஸ்.