வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் – ஐ.பி. கார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘8 தோட்டாக்கள்’.
மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி நாயகன், நாயகியாக நடிக்க நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் இசை உரிமையை ‘யு 1 ரெகார்டஸ்’ நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கியதுமே இந்தப் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட்டது.
“இளம் திறமையாளர்களால் தமிழ் திரையுலகமே தற்போது நிரம்பி கொண்டிருக்கின்றது. விரைவில் அந்த வரிசையில் இணைய இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அவர் என்னிடம் இந்தக் கதையை கூறும் போது கூட எனக்கு அவர் மேல் முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் அவர் படக்குழுவினரை கையாண்ட விதம் என்னை முழுவதுமாக வியப்பில் ஆழ்த்தி விட்டது. எம்எஸ். பாஸ்கர் நடித்த ஒரு காட்சியை பார்த்து விட்டு நான் மெய் சிலிர்த்து போய் விட்டேன். அந்த ஒரு காட்சிக்கு எம்எஸ். பாஸ்கர் நிச்சயமாக தேசிய விருதைப் பெறுவார்,” என்கிறார் நாசர்.
“இத்தகைய வலுவான கதையம்சம் கொண்ட படத்தைத் தேர்வு செய்த சக்திவேல் பிலிம் பேக்டரி சக்திவேல் அவர்களுக்கும், இந்தப் படத்தின் தயாரிப்பு வேலைகளை மிக அழகாக கையாண்டு இருக்கும் பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் அவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன். ஸ்ரீ கணேஷ் போன்ற ஒரு திறமையான படைப்பாளியை அறிமுகப்படுத்தி, தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து இருக்கின்றது ‘வெற்றிவேல் சினிமாஸ்’ நிறுவனம். நிச்சயமாக தமிழ் திரையுலகை பெருமைப்படுத்தக் கூடிய திரைப்படமாக இந்த ‘8 தோட்டாக்கள்’ இருக்கும்,” என்கிறார் தயாரிப்பாளர் – நடிகர், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா.
சக்திவேல் பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.