அனிதா மறைவு – நடிகைகள் இரங்கல் செய்தி

தங்களை ஹீரோக்கள் என சொல்லிக் கொண்டுத் திரியும், சில முன்னணி ஹீரோக்கள் மக்கள் பிரச்சனைகள் எதிலும் தங்களது கருத்துக்களைக் கூடச் சொல்ல மாட்டார்கள்.

அவர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு தமிழ் ரசிகர்கள் வேண்டும். அவர்கள் தரும் டிக்கெட் பணம் வேண்டும். ஆனால், தமிழ் ரசிகனின், தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தப்பித் தவறிக் கூடக் குரல் கொடுத்து விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட பொய்யான ஹீரோக்களுக்கு மத்தியில், அனிதாவின் மறைவுக்கு சில நடிகைகளும் அவர்களது இரங்கலைத் தெரிவித்து, அந்த பொய்யான ஹீரோக்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார்கள்.

அனிதா மறைவு குறித்து வருத்தம் தெரிவித்து இரங்கல் வெளியிட்டுள்ள சில நடிகைகளின் பதிவுகள்

ஸ்ரீப்ரியா

அன்பு அனிதா…உன் கனவை பலியிட மனமில்லாது உன்னையே பலியிட்டாயோ ?. சிந்திக்க தவறினாயோ மகளே சித்தம் கலங்கும் உன் பெற்றோருக்கென்று…லட்சங்கள் வரலாம் நிதி-உன்
லட்சியத்திற்கு வருமா நீதி, சிறு விரல் கூட அதை தீண்டினால் உன் பெரும் தியாகம் சிதைந்து போகும்.

கஸ்தூரி

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறீர்கள் ?. 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது. எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது.

வரலட்சுமி சரத்குமார்

இப்படிப்பட்ட கல்விமுறையாக நமக்குத் தேவை…அனிதா மற்றும் அவரது குடும்பத்தாரை நினைத்து மனம் கலங்குகிறது.

ஸ்ரீதிவ்யா

இது மனதை உடைய வைக்கிறது. நீட் என்ற பெயரில் ஒரு திறமையான, படிப்பாளியான ஜீவன் ஒன்று கொலை செய்யப்பட்டுவிட்டது. அவருடைய குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.

நிக்கி கல்ரானி

எதற்கும் தற்கொலை மட்டும் தீர்வு அல்ல. ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வந்தது மிகவும் வருத்தமானது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

சாய் தன்ஷிகா

இறந்தது அனிதா மட்டுமல்ல, அவருடைய நம்பிக்கை, அறிவு, அத்தனையும் கொன்றுவிட்டது.

ரித்திகா சிங்

அனிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த வருத்தமடைந்தேன். மாணவர்கள் மீது நமது கல்விமுறை தரும் அழுத்தத்திற்கு மற்றுமொரு உதாரணம். உங்கள் மதிப் பெண்கள், உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்பதை இளைஞர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.

சில புத்திசாலித்தனமான, பணக்காரர்கள் தோல்வியடைந்தவர்கள்தான். இது அவர்களை மட்டும் தடுத்து நிறுத்தாது என்றால், உங்களையும் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தாது.

தேர்வுகள் முக்கியமானவதைதான், ஆனால், உங்களது வாழ்க்கையை விட வேறு எதுவும் முக்கியமானதல்ல.

அனிதா, 17 வயது மதிப்புள்ள பெண். அவளுக்கான மொத்த வாழ்க்கையும் அவள் முன்னால் இருந்தது. அவளுடைய முடிவு என் இதயத்தை உடைத்துவிட்டது.

புதிதாக வந்த ரித்திகா சிங் கூட இரங்கல் தெரிவிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டிலேயே பல வருடங்களாக தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற சிலர் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒரு நாய் காணாமல் போனால் கூட அதை அவர்களுடைய டிவிட்டரில் பதிவிட்டு வருந்துவார்கள். அவர்களுக்கு அனிதாவின் மறைவு என்பதெல்லாம் கண்ணில் கூட படாது.

 

Read Previous

இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும் – பார்த்திபன்

Read Next

புரியாத புதிர் – விமர்சனம்

Most Popular