புரியாத புதிர் – விமர்சனம்

ஒரு குறும்படத்தில் சொல்லி முடிக்க வேண்டிய கதையை நீட்டி இழுத்து இரண்டு மணி நேரம் கொடுத்திருக்கிறார்கள்.

எடுத்துக் கொண்ட பிரச்சனை இன்றைய சூழ்நிலையில் தேவையான பிரச்சனை ஆனால், அதில் காதலை சேர்த்து படத்தில் வரும் இரண்டு தற்கொலைகளைப் போல் படத்தையும் தற்கொலை செய்ய வைத்துவிட்டார்கள்.

அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ஒரு பெண்ணின் வீடியோ பகிரப்படுவதால் என்னவெல்லாம் துயரம் வருகிறது என்பதை ஒரு படமாகச் சொல்லியிருக்கிறார். அவருடைய அந்த எண்ணம் சரியானதுதான், அதைச் சொன்ன விதம்தான் சரியில்லை.

இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பவர் விஜய் சேதுபதி. அவருக்கும் இசையைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருக்கும் காயத்ரிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறுகிறது. ஒரு நாள் விஜய் சேதுபதி மொபைலுக்கு காயத்ரின் ஆபாசப் புகைப்படம் ஒன்று வருகிறது. அடுத்து காயத்ரியின் சில ஆபாச வீடியோக்களும் வருகிறது. அதை அனுப்புவது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் விஜய் சேதுபதி. அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

விஜய் சேதுபதி ‘பீட்சா’ படம் வெளியான சமயத்தில் நடிக்க சம்மதித்த படம் போலிருக்கிறது. இப்போது இருப்பதை விட கொஞ்சம் இளமையாக இருக்கிறார். கடந்த சில வருடங்களில் பல நல்ல படங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திவிட்டார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. வீடியோக்களைப் பார்த்து பதட்டப்படுவதும், கொஞ்சம் கோபப்படுவதும் மட்டுமே செய்கிறார். ஒரு திறமையான நடிகரின் பட வெளியீடு காலதாமதம் ஆக வந்தால் என்ன ஆகும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

காயத்ரி, வழக்கம் போல சோகமான முகத்துடன் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் விஜய் சேதுபதியை விட மிகவும் வயது குறைந்தவராகத் தெரிகிறார். அதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதைக் கூட ரொம்பக் கஷ்டப்பட்டு ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. காயத்ரி பற்றிய கிளைமாக்சுக்கு முந்தைய திருப்பம் எதிர்பாராத ஒன்று.

மகிமா நம்பியார் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அழகான பெண்களுக்கு ஆபத்து எப்போதும் அதிகம்தான். அது எந்த ரூபத்தில் வரும் என்றே தெரியாது. கொஞ்ச நேரமே வந்தாலும் கலங்க வைத்துவிடுகிறார் மகிமா.

படத்தில் வில்லன்கள் என்று யாரும் கிடையாது. ஆனால், படத்தின் நாயகிதான் படத்திற்கும் வில்லன் என்பது ஆச்சரியமான ஒன்று. அந்த சஸ்பென்சை அருமையாகக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர்.

மிகவும் மெதுவாக நகர்கிறது படம். காயத்ரியை யாரோ ஒருவர் ஃபாலோ செய்வது போன்ற காட்சிகள் எல்லாம் பார்த்துப் பார்த்து சலித்துப் போன விஷயங்கள். தவறு செய்யக் காரணமாக இருந்தவர்களை வீடியோ எடுத்து மாட்டி விடுவது எல்லாம் கற்பனை வறட்சி. அர்ஜுனனை போலீசிடம் சிக்க வைப்பதை எல்லாம் பழி வாங்கலில் சேர்த்துக் கொள்வது சிரிப்பை வரவைக்கிறது.

வர வேண்டிய நேரத்தில் இந்தப் படம் சரியாக வந்திருந்தால் சுமாரான வெற்றியையாவது வெற்றிருக்கும்.

Read Previous

அனிதா மறைவு – நடிகைகள் இரங்கல் செய்தி

Read Next

கவர்ச்சியில் இறங்கிய அமலா பால்