விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்தரின் தெரேசா, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘கதாநாயகன்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் இந்தப் படம் மூலம் நகைச்சுவை நடிகராகவும் வளர்ந்து வரும் முருகானந்தம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி முருகானந்தம் கூறியதாவது,
“இது ஒரு கலகலகப்பான படம். இந்தப் படத்திற்கு பழைய படப் பெயரான ‘கதாநாயகன்’ அவ்வளவு பொருத்தமாக இருந்ததால் வைத்தோம். விஷ்ணு விஷாலின் காதலியான கேத்தரின் தெரேசாவின் அப்பா நட்ராஜ், தன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது சாதிக்க வேண்டும் என விஷ்ணுவிடம் சொல்கிறார். எதற்கு வம்பு என ஒதுங்கியே இருந்து பழக்கப்பட்ட விஷ்ணு வருங்கால மாமனாரின் வேண்டுகோளை ஏற்று எப்படி ‘கதாநாயகன்’ ஆக மாறினார் என்பதுதான் படத்தின் கதை. இதை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறோம்,” என்கிறார்.
படத்தில் விஷ்ணுவின் மாமனாராக அவருடைய நிஜ மாமனார் நட்ராஜ் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
படம் பற்றி விஷ்ணு கூறியதாவது,
“தொடர்ந்து நல்ல படங்களிலேயே நடித்து வருகிறேன். ‘நீர்ப் பறவை’ படத்திற்குப் பிறகுதான் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின் நான் நடித்து வெளிவந்த “முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு,” ஆகிய படங்கள் வெற்றியையும், நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கின்றன. அதை ‘கதாநாயகன்’ படமும் கொடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து ‘பொன் ஒன்று கண்டேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். ஒவ்வொரு படமும் வித்தியாசமாகத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கமர்ஷியல் ஆக மட்டுமல்லாமல் நல்ல கதைகளிலும் நடிக்க ஆசைப்படுகிறேன்,” என்றார்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சூரியின் நகைச்சுவையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது என்கிறார் இயக்குனர்.
நாளை வெளிவரும் 7 படங்களில் ‘கதாநாயகன்’ படம் தான் அதிக நம்பிக்கை தரும் படமாக இருக்கிறது என்று திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.