தமிழ்ப் டங்கள் வெளிவருவதை முறைப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வருகிறது.
ஆனால், அதை தயாரிப்பாளர் சங்கம் கடுமையாக எடுத்து முறைப்படுத்தவில்லை என்ற வருத்தம் பல தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது.
பெரிய திரைப்படங்களுக்கு மட்டுமே பல தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். சிறிய படங்களை வெளியிட அவர்கள் தியேட்டர்களைத் தருவதேயில்லை. குறிப்பாக சிறிய பட்ஜெட் தமிழ்ப் படங்களை வெளியிடுவதை விட மற்ற மொழிப் படங்களை வெளியிட சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
சிறிய படங்களையும் திரையிடும் தியேட்டர்களுக்குத்தான் பெரிய படங்களையும் கொடுக்க வேண்டும் என்று ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால் சிறிய பட்ஜெட் படங்களும் தப்பிக்கும்.
படம் வெளிவந்து மக்களின் வரவேற்பைப் பெறும் வரை பெரிய நடிகர்கள் படம், சிறிய நடிகர்கள் படம் என்று எதுவுமேயில்லை. ‘விவேகம்’ படம் கொடுக்கும் நஷ்டத்தை விட ‘குரங்கு பொம்மை’ போன்ற படங்கள் தரும் லாபம் சமயங்களில் அதிகமாகவே இருக்கும்.
நாளை செப்டம்பர் 8ம் தேதி ஒரே நாளில் “ஆறாம் வேற்றுமை, காதல் கசக்குதய்யா, கதாநாயகன், மாய மோகினி, நெருப்புடா, ஒன் ஹார்ட், தப்பு தண்டா” ஆகிய 7 படங்கள் வெளியாகின்றன.
இப்படி ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளிவந்தால் ஒரு படத்திற்கு 100 தியேட்டர்கள் கிடைப்பது கூட கடினமாக இருக்கும்.
ஒரே நாளில் இப்படி நியாயமற்ற முறையில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுத்தால்தான் தமிழ்த் திரையுலகத்திற்கு நல்லது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் சங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.