லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ‘2.0’ படத்தின் முதல் பார்வை வெளியீடு கடந்த வருடம் மும்பையில் நடைபெற்றது.
ஒரு தமிழ்ப் படத்தின் முதல் பார்வை வெளியீட்டை மும்பையில் நடத்துவதா என்ற முணுமுணுப்பு அப்போது எழுந்தது. ஆனால், படத்தில் அக்ஷய் குமார் நடிப்பதால் அவருக்கென இந்திய அளவில் நல்ல வியாபாரம் இருப்பதாலும் படத்தை ஹிந்தியிலும் வெளியிட இருப்பதாலும் மும்பையில் விழாவை நடத்தினார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடுவதன் மூலம் இந்தப் படத்தை உலக அளவில் பெரிய வியாபாரத்தைச் செய்ய முடியும். அதனால், படத்தின் அடுத்த கட்ட விழாக்களை ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடத்த உள்ளார்கள்.
இது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் சற்று முன் வெளியிட்டுள்ளார்.
“அக்டோபார் மாதம் துபாயில் ஆடியோ வெளியீடு, நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் டீசர் வெளியீடு, டிசம்பர் மாதம் சென்னையில் டிரைலர் வெளியீடு” என அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2.0 படம் ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.