ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்

காதல், காமெடி, பேன்டஸி, கலந்து கலகலப்பான ஒரு படத்தைத் தனது முதல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். ஆந்திர மலைப் பிரதேசக் கிராமத்தில் ஆரம்பமாகும் கதை, சென்னைக்கு வந்து மீண்டும் மலைக் கிராமத்திற்கே திரும்பி சென்று கலகலப்பாக முடிகிறது.

எமசிங்கபுரம் என்ற ஆந்திர மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேசத்தில் வெளி உலகிற்கே தெரியாத ஒரு கிராமத்துத் தலைவியான விஜி சந்திரசேகர் மகன் விஜய் சேதுபதி. கிராமத்தில் உள்ள அனைவருக்குமே திருட்டுதான் தொழில். ஆனால், திருடச் செல்லும் போது கொலை செய்யக் கூடாது, பெண்களைத் தொடக் கூடாது என்ற கட்டுப்பாடுடன்தான் தொழில் செய்வார்கள். அப்படி ஒரு முறை திருடுவதற்காக சென்னைக்குச் செல்லும் போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நிஹரிகாவை விஜய் சேதுபதி அன்ட் கோ மலை கிராமத்திற்கு கடத்தி வந்துவிடுகிறது. விஜய் சேதுபதி, நிஹரிகாவை ஏன் கடத்தினார் என்பது சஸ்பென்ஸ். காதலி நிஹரிகாவைத் தேடி காதலன் கௌதம் கார்த்திக்கும் மலை கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு விஜய் சேதுபதிக்கும், நிஹரிகாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அதைப் பார்த்து அதிர்ச்சியடையும் கௌதம், காதலி நிஹரிகாவுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை தடுக்கிறாரா ?, விஜய் சேதுபதிக்கும், நிஹரிகாவுக்கும் எதனால் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது ?, இதுதான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேடி நடிக்கும் விஜய் சேதுபதி, இந்தப் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். அதோடு, படத்தில் பலவிதமான தோற்றங்கள், ஒவ்வொன்றிலும் நகைச்சுவை இழையோட நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் போகப் போக கொஞ்சம் வில்லனாகவும் மாறுகிறார். தான் நடிக்கும் படம் ஒவ்வொன்றிலும் முழு ஈடுபாட்டுடன் நடிக்கும் விஜய் சேதுபதி இந்தப் படத்திலும் அதை நிறைவாகவே செய்திருக்கிறார். ஆனால், அவருடைய நடிப்புக்கு இன்னும் தீனி போடும் காட்சிகள் வைத்திருக்கலாம் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

கௌதம் கார்த்திக் இந்தப் படத்தில் காமெடியையும் ஒரு கை பார்த்திருக்கிறார். அதுவும் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. தன் ஹீரோ இமேஜையும் தள்ளி வைத்துவிட்டு, தடாலென யார் காலிலும் விழுவது, மற்றவர்களிடம் அடி வாங்குவது, யாராவது லூசு எனத் திட்டினாலும் அதைக் கண்டு கொள்ளாமல் போவது என அவருடைய கதாபாத்திரத்திற்கு எது சரியோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார். முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் கூடுதல் முன்னேற்றம் தெரிகிறது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹரிகா, தமிழில் முதல் முறையாக நடித்திருக்கும் படம். சினிமாத்தனமில்லாத பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருக்கிறார். கௌதம் கார்த்திக் மீதான காதலை மறைத்துக் கொண்டு உணர்வதிலும், விஜய் சேதுபதி மீதான வெறுப்பைக் காட்டுவதிலும் நிஹரிகா நடிப்பில் நிற்கிறார். மற்றொரு கதாநாயகியாக காயத்ரி. விஜய் சேதுபதியை ஒருதலையாய் காதலிக்கும் கதாபாத்திரம். இந்தப் படத்திலும் அதே சோக முகம்தான். எங்காயவது கொஞ்சம் சிரிங்க காயத்ரி என்று சொல்ல வைக்கிறார்.

படமே பேன்டஸி காமெடிப் படம் என்றாலும் டைமிங் காமெடிகளில் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளி தியேட்டர்களில் சிரிப்பு சத்தத்தை வரவழைப்பவர்களில் டேனிக்குத்தான் முதலிடம். அடுத்து விஜய் சேதுபதியின் உதவி ஆளாக வரும் ராஜ்குமார். மற்ற கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதியின் அம்மா விஜி சந்திரசேகர், மற்றொரு உதவி ஆள் ரமேஷ் திலக் இருவரும் குறிப்பிட வைக்கிறார்கள்.

மலை வாழ் கிராமம், மலைப் பிரதேசம் என ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன் இரவையும், பகலையும் இனிமையாகக் காட்டியுள்ளார். மலை வாழ் கிராமத்தை தன் கலையமைப்பால் அற்புதமாய் உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குனர் முத்து. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ‘என் எலும்பை எண்ணி…’ பாடல் வித்தியாசமாய் ஒலிக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

பல கமர்ஷியல் படங்களிலேயே பல லாஜிக் மீறல்கள் இருக்கும். இந்தப் படம் முற்றிலும் ஒரு பேன்டஸியான கதை கொண்ட படம். ஆந்திர கிராமத்தில் தெலுங்கையும், தமிழையும் பேசும் மலை கிராம மக்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் சென்னையில் வசிக்கிறார். அவருக்கு ஒரு மகள், அந்த மகளுக்கு ஒரு காதல், அதன் பின் அந்த மகளைக் கடத்தும் மலை கிராமத் தலைவியின் மகன் என அந்தக் காலத்து ‘அம்புலிமாமா’ கதையைப் படித்த எபெக்ட் வருகிறது. சிலபல குறைகளைத் தள்ளி வைத்துவிட்டால் குழந்தைகள், பெண்கள், குடும்பத்தினருடன் ரசிக்கும்படியான ஒரு கலகலப்பான படமாகவே இருக்கும்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – நாள், நேரம் பார்க்காமல் சென்று ரசிக்கலாம்.

Read Previous

‘களவாணி 2’ தலைப்பு யாருக்குச் சொந்தம் ?

Read Next

படை வீரன் விமர்சனம்

Most Popular