படை வீரன் விமர்சனம்

சாதி வெறி இன்னமும் சில கிராமத்துப் பக்கங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த காலங்களை விட சாதி மாறி காதலிப்பவர்கள் மீதான தாக்குதல் கொலை வெறி வரை சென்று கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கொடுமையை மையமாக வைத்து ஒரு உணர்வு பூர்வமான படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தனா.

கிராமத்தில் வெட்டித்தனமாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் விஜய் யேசுதாஸ், போலீஸ் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டு லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி பயிற்சிக்கும் செல்கிறார். அவர் பயிற்சி முடித்த சமயம், அவர்களது ஊரில் அவருடைய சாதிக்காரப் பெண்ணை உறவுக்காரர்களே கொலை செய்து விடுகிறார்கள். அந்தப் பெண்ணைக் காதலித்த மாற்று சாதிக்காரரையும் கொலை செய்கிறார்கள். இதனால் ஊரில் கலவரம் ஏற்படுகிறது. அந்தக் கலவரத்தை அடக்க அனுப்பப்படும் காவல் துறைப் படையில் விஜய் யேசுதாஸும் இடம் பெறுகிறார். கலவரத்தை அடக்க அவர் செய்யும் விஷயம் என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

விஜய் என்று பெயர் இருந்தாலே நன்றாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவார்கள் போலிருக்கிறது. யதார்த்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதி வரிசையில் விஜய் யேசுதாஸும் தாராளமாக இடம் பிடிக்கலாம். அந்த அளவிற்கு அவருடைய முனீஸ் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பாடுவதுடன் நடிப்பையும் தொடருங்கள் விஜய், கண்டிப்பாகப் பெயர் கிடைக்கும்.

விஜய் யேசுதாஸ் காதலியாக அம்ரிதா. கிராமத்துப் பெண்களுக்கே உரிய துணிச்சலான கதாபாத்திரம். விஜய், தன்னை அவமானப்படுத்தினார் என்பதற்காக பதிலுக்கு அவரும் காதலிப்பதாகச் சொல்லி பின்னர் அவமானப்படுத்துவது அதிர்ச்சி.

பாரதிராஜா, பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தமுள்ளவை. இத்தனை நாள் நடிகராக அவரே அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என வருத்தம் வருகிறது.

சாதி வெறியும், ஆணவமும் பிடித்த ஊர் பெரிய மனிதராக கவிதா பாரதி. ‘அறம்’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் கவனிக்க வைக்கிறார். விஜய்யின் அக்காவா நடித்திருக்கும் நிஷா, சாதி ஆணவத்தால் கொலை செய்யப்படும் சிந்து ஆகியோரும் யதார்த்தமான நடிப்பில் அவர்களை கவனிக்க வைக்கிறார்கள்.

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை இளையராஜாவை ஞாபகப்படுத்துகிறது. உயிரோட்டமான கதைக்கு மேலும் உயிரோட்டத்தை தன் பின்னணி இசை மூலம் கொடுத்திருக்கிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு, புவன் சீனிவாசனின் படத் தொகுப்பு ஆகியவை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

வளரும் நடிகர்களை வைத்து ஒரு அறிமுக இயக்குனர் துணிச்சலான ஒரு கதையைக் கொடுத்ததற்காகப் பாராட்ட வேண்டும். இம்மாதிரியான சிறந்த சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் கை கொடுத்தால் தமிழ் சினிமாவும் வளரும்.

படை வீரன் – செயல் வீரன்…

Read Previous

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்

Read Next

மதுர வீரன் விமர்சனம்