விக்ரம், தமன்னா நடித்து கடந்த பொங்கலன்னு வெளிவந்த ‘ஸ்கெட்ச்’ படத்தின் கதையும், இந்த ‘கூட்டாளி’ படத்தின் கதையும் ஏறக்குறைய ஒன்றுதான்.
சதீஷ் அவருடைய நண்பர்கள் மூவர் தவணை பணம் கட்டாத கார்களை தூக்கி வரும் வேலையைச் செய்கிறார்கள். ஒரு கவுன்சிலரின் காரை அப்படி தூக்கி வந்தததால் அந்த கவுன்சிலர் அவர்கள் மீது கொலை வெறியில் இருக்கிறார். இதனிடையே, சதீஷுக்கும் கிரிஷா-வுக்கும் காதல் வருகிறது. இந்தக் காதலுக்கு கிரிஷாவின் இன்ஸ்பெக்டர் அப்பா கல்யாண் எதிராக இருக்கிறார். சதி செய்து தன் மகளின் காதலைப் பிரிக்க நினைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘அழகி’ படத்தில் சிறுவனாக நடித்த சதீஷ் இந்தப் படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு. அவருடைய நண்பர்களாக அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ். அப்புக்குட்டி தவிர மற்ற இருவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
படித்தவரான கிரிஷா காரைத் தூக்கி வரும் சதீஷைக் காதலிப்பது வழக்கமான தமிழ் சினிமா நெருடல். அம்மாவின் தற்கொலைக்குக் காரணமான அப்பாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுபவர், மீண்டும் காதலுக்காக அப்பாவிடம் வருகிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார் கிரிஷா.
மற்ற கதாபாத்திரங்களில் கல்யாண், அருள்தாஸ், மகேஷ்வரன் குறிப்பிட வேண்டியவர்கள்.
பெரிய திருப்பங்கள் இல்லாத கதையாக இருந்தாலும், படம் போரடிக்காமல் நகர்கிறது. படத்தின் முடிவு நெகிழ வைக்கும் ஒன்று.