ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும்13வது படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது.
இப்போது மேலும் ஒரு புதிய படமாக ராஜேஷ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 13வது படமாகவும், ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் 14வது படமாகவும் தயாராக உள்ளது. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘சீமராஜா’ படத்திற்குப் பிறகு இந்த 13வது படம் வெளிவரும்.
இந்த படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா கூறியதாவது,
“ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒரு படத்தில் இணையும் போது, அந்தப் படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும், ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர அமைப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்தப் படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன்.
மேலும் சிவகார்த்திகேயன், பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்,” என்றார்.