ஆர்ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடிக்கும் ‘எல்கேஜி’

எப்எம் ரேடியோவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்து நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்ஜே பாலாஜி. இப்போது ‘எல்கேஜி’ என்ற படத்தின் மூலம் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். அவருடைய அப்பாவாக முன்னாள் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். சினிமாவிலிருந்துதான் பலரும் அரசியலுக்குப் போவார்கள். நாஞ்சில் சம்பத் அரசியலிலிருந்து சினிமாவுக்கு வருகிறார்.

இப்படத்தை பிரபு இயக்குகிறார்.

படம் பற்றி ஆர்ஜே பாலாஜி கூறியதாவது,

“இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றியமையாத ஒன்று. நிமிடத்துக்கு நிமிடம் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியைப் பற்றியும், அரசியல்வாதிகளின் பின் புலத்தையும் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம் தான் ‘எல்கேஜி’.

நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். எனது நீண்ட நாள் தோழியான இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டி தந்த பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.

லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, ‘மேயாத மான்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்,” என்கிறார் ஆர்ஜே பாலாஜி.

வேல் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Read Previous

‘எழுமின்’ டிரைலர் விழா, ஒரே மேடையில் விஷால், சிம்பு

Read Next

‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு