‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ், கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இலன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனம்தான் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ். இப்படத்தில் நாயகன், நாயகியாக நடிக்கும் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள்.

படம் பற்றி யுவன் கூறியதாவது,

“இயக்குநர் இலன் என்னிடம் கதை சொல்லும் போதே இந்தக் கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும், ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் புரிந்து கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களின் உழைப்பைக் கண்டு பிரமித்து போனேன்.

ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்துக்கு பிறகு மிகப் பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார். ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் ‘கெமிஸ்ட்ரி’ தான் ‘ஹை ஆன் லவ்’ பாடல் இணையதளத்தில் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை சென்று பெரும் வெற்றி பெறக் காரணம்.

பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அஜர்பைஜான் என்ற நாட்டுக்குச் சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அஜர்பைஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று நான் உறுதியாகக் கூறுவேன்,” என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

Read Previous

ஆர்ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடிக்கும் ‘எல்கேஜி’

Read Next

ராஜ் டிவியில் புதிய தொடர் ‘ஹலோ சியாமளா’