திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள், படத்துக்குப் படம் வித்தியாசமான கதையை எதிர்பார்க்கும் காலம் இது. அதை மனதில் கொண்டு இந்தக் கால டிரெண்டுக்கு ஏற்றபடி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் திரு.
அப்பா கார்த்திக், மகன் கௌதம் இடையிலான நண்பர்களைப் போன்ற பாசம், காதலன் கௌதமுக்குத் துணையாக இருக்கும் காதலி, ரயிலில் பழகிய கார்த்திக்குடன் மகள் போன்று பழகும் ஒரு அன்பு, நண்பன் கார்த்திக்குக்காக உதவிக்கு வரும் அகத்தியன் என உறவுப் பாலங்களால் இந்த சந்திரமௌலியை நம்முடன் நெருக்கமாக இணைத்துள்ளார் திரு.
அப்பாவுக்குத் துணை மகன், மகனுக்குத் துணை அப்பா என நண்பர்களைப் போன்று அன்பாக வாழ்ந்து வரும் கார்த்திக், கௌதம் கார்த்திக் இடையில் நிரந்தரப் பிரிவு ஒன்று ஏற்படுகிறது. ஒரு விபத்தில் கார்த்திக் திடீர் என மரணம் அடைகிறார். கௌதமுக்கு இரண்டு அடிக்கு மேல் கண் பார்வை மங்கலாக மட்டுமே தெரியும் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதனிடையே, கார்த்திக் விபத்தில் மரணமடையவில்லை, விபத்தின் மூலம் கொல்லப்பட்டுள்ளார் என்ற உண்மை கௌதமுக்குத் தெரிய வருகிறது. தனக்கிருக்கும் பார்வை குறைபாட்டையும் மீறி அப்பாவைக் கொன்றவர்களை கௌதம் கண்டு பிடித்து பழி தீர்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
அறிமுகமான படத்திலிருந்தே அப்பா கார்த்திக்கைப் போன்றே துள்ளலான நடிப்பை வெளிப்படுத்துபவர் கௌதம் கார்த்திக். இந்தப் படத்தில் அப்பா கார்த்திக்குடன் சேர்ந்து நடிக்கும் போது அப்பாவை நடிப்பில் மிஞ்ச முடியாமல் கொஞ்சம் தடுமாறிப் போகிறார். கார்த்திக்கிடம் இருக்கும் அந்த நிரந்தரக் குறும்புத்தனம் இந்தப் படத்திலும் அப்படியே இருக்கிறது. மிஸ்டர் சந்திரமௌலி ஆக அட்டகாசமாக நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக வரலட்சுமியுடனான காட்சிகளில் அதே கார்த்திக்தனம், கொஞ்சமும் மிஸ் ஆகாமல் இருக்கிறது.
கௌதம் கார்த்திக் பார்த்த மாத்திரத்தில் ரெஜினாவிடம் ஐ லவ் யூ சொல்லிவிடுகிறார். இருவருக்கும் காதல் வருவதற்கான செல்லச் சண்டைகள் எதுவுமில்லை என்றாலும், காதலர்களான பின் காதலால் உருக வைக்கிறார்கள். இந்தக் காலத்தில் காதலனிடம் சிறு குறை என்றாலே ஓடி விடும் காதலிகள் மத்தியில் காதலனுக்கு பார்வையில் பிரச்சினை வந்தும் அவரை விட்டு ஓடிவிடாமல் தன் காதல் உண்மைக் காதல் என நிரூபிக்கிறார் ரெஜினா.
வரலட்சுமி இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரமே வந்தாலும் ‘மௌனராகம்’ கார்த்திக் போல மனதில் பதிந்துவிடுகிறார். அவ்வளவு மெச்சூரிட்டியான நடிப்பு அவரிடம் வெளிப்பட்டுள்ளது.
சதீஷ் இருக்கிறார் ஆனால், நகைச்சுவைதான் இல்லை. கௌதம் கார்த்திக் நண்பனாக குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார். வழக்கமான நண்பன் கதாபாத்திரம்.
படத்தில் மகேந்திரன், மைம் கோபி, சந்தோஷ் பிரதாப் ஆகிய மூவரில் யார் வில்லன் என்பது கடைசி வரை சஸ்பென்ஸ். அதை சொல்லிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும்.
சாம் சிஎஸ் இசையில் ‘ஏதேதோ…ஆனேனே…’ இந்த ஆண்டின் டாப் 10 பாடல்களில் நிச்சயம் ஒரு இடத்தைப் பிடிக்கும்.
படம் ஆரம்பத்திலிருந்தே ‘டேக் ஆப்’ ஆகும் என்று எதிர்பார்த்தால் மெதுவாக, சில சுவாரசியமில்லாத காட்சிகளால் நகர்கிறது. இடைவேளை வரை கௌதம், ரெஜினா காதலையாவது கொஞ்சம் நீளமாக சொல்லியிருந்தால் படம் பார்க்கும் இளைஞர்களுக்கு முழு என்டர்டெயின்மென்ட் கிடைத்திருக்கும்.
இருப்பினும் இடைவேளைக்கு முன்பாக சரியான திருப்பத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். அதன்பின் கிளைமாக்ஸ் வரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது.
அப்பாவைக் கொன்றவர்களை மகன் பழி வாங்கும் கதையை நாயகனின் வித்தியாச கதாபாத்திரத்துடன் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் திரு.
மிஸ்டர் சந்திரமௌலி – மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்…