2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையைமப்பில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.
இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துறுதுறு குட்டிப் பெண்ணான தனுஸ்ரீ, அவருடைய தம்பி தேஜ் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடித்தது குறித்து தனுஸ்ரீ கூறும் போது,
“கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தது ஜாலியாக இருந்தது. என்னை எல்லோரும் அன்பாகப் பார்த்து கொண்டார்கள். சத்யராஜ் அங்கிள், கார்த்தி அங்கிள், சாயிஷா ஆன்ட்டி மற்றும் பிரியா ஆண்ட்டி எல்லோரும் அவங்க குடும்பத்து குழந்தைகளாக பார்த்துக்கொண்டார்கள்.
படப்பிடிப்பில் நான் சில நேரங்களில் பாடினேன், அதைப் பார்த்து எல்லோரும் எனக்கு முத்தம் குடுத்தார்கள். இப்போதைக்கு நடிப்புதான் எனக்கு முக்கியமானது. நடிப்பில் தான் இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது.
கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடக்கும். சில நேரங்களில் இரவு தாமதமாக முடியும். மீண்டும் காலை சீக்கிரமாக படப்பிடிப்பு துவங்கும். படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தம்பிதான் அதிக குறும்பு செய்வான், நான் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பேன்.
இமான் அங்கிள் என்னை சீக்கிரமே பாட வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தில் பாடாதது எனக்கு வருத்தமில்லை. என்னை நன்றாக பாசத்தோடு கவனித்த சூர்யா, கார்த்தி மற்றும் பாண்டிராஜ் அங்கிளுக்கு நன்றி,” என்றார்.
‘கடைக்குட்டி சிங்கம்’ விரைவில் வெளியாக உள்ளது.