2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.
இப்படத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், விவசாயத்தின் பெருமையையும் மையமாக வைத்து வெளிவந்துள்ள இந்தப் படத்திற்கு குடும்பத்து ரசிகர்களின் ஆதரவு அதிகமாகக் கிடைத்துள்ளது. அந்த வரவேற்பு படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவை நெகிழ வைத்திருக்கிறது.
அது பற்றி அவருடைய டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,
“தியேட்டரில் அனைவருமே சிரிப்பதும், எமோஷன் காட்சிகளில் அவர்களை இணைத்துப் பார்த்ததும் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. மனம் விட்டு சிரித்தேன், கண்ணீரைத் தடுக்க முடியாமல் தவித்தேன். இயக்குனர் பாண்டிராஜுக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி. உனக்காகவும் மகிழ்ச்சி கார்த்தி. எங்களது ‘கடைக்குட்டி சிங்கம், சின்னாபாபு’ குழுவினர் ரசிகர்களின் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி சொல்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.
படம் வெளியான நேற்றைய முதல் நாள் வசூலை விட இன்று இரண்டாவது நாள் வசூல் மிகவும் சிறப்பாக இருந்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.