கழுகு 2, படத்தில் பரபரப்பான ஆரம்பக் காட்சி

சத்யசிவா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையைமப்பில் கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கழுகு 2’.

2012ம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை கேரளாவில் உள்ள மலைப் பிரதேசங்களில் படமாக்கி வருகிறார்கள்.

இப்படத்தின் பரபரப்பான காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ஒய்எஸ்ஆர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் அந்த விபத்தில் மரணமடைந்தார். அதை மையமாக வைத்து ஒரு காட்சியை சமீபத்தில்
படமாக்கியுள்ளார்கள்.

இது பற்றி படக்குழுவினர் எந்தவித பெயரையும் குறிப்பிடாமல் அந்தக் காட்சி படமாக்கம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்த முதலமைச்சரையும் தேடுவதற்காக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

அடர்ந்த காட்டுக்குள் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலோடு ராணுவ வீரர்கள் சல்லடை போட்டு தேடுகிறார்கள். எங்கு தேடியும் நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களோ, அதில் பயணம் செய்த முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை.

காட்டின் பெரும்பகுதியை தேடுவதற்கு உதவிய உள்ளூர் கிராம மக்கள் காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு வர மறுக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தக் காட்டு பகுதியில் வாழும் செந்நாய்கள். மிருகங்களிலேயே போர்க்குணம் மிக்க மிருகமென்றால் அது செந்நாய் தான். இரண்டு செந்நாய்கள் சேர்ந்தால் ஒரு சிங்கத்தையே வீழ்த்தி விடும்.

செந்நாயால் உயிருக்கு ஆபத்து என்பதால் உள்ளூர் மக்கள் வர மறுக்க, ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக செந்நாய்களை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா வரவழைக்கப்படுகிறார். ஹெலிகாப்டரை தனி ஆளாகத் தேடி அதன் நிலையை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி செந்நாய்கள் இருக்கும் அந்தப் பகுதிக்குள் செல்கிறார் கிருஷ்ணா.

சீட்டின் நுனியில் அமர வைக்கப் போகும் இந்த ஆரம்பக் காட்சியிலேயே மூன்று செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் பிரம்மாண்ட சண்டை காட்சி சமீபத்தில் மூணார் காட்டு பகுதியில் படமாக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களின் உடையணிந்த துணை நடிகர்களோடு, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஹெலிகாப்டரைத் தேடி காட்டிற்குள் நுழையும் ஆரம்ப காட்சி மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

‘புலிமுருகன்’ படத்தில் புதுவித உத்திகளோடு மோகன்லால் புலியை வீழ்த்துவதை போல வித்தியாசமான உத்திகளை பயன்படுத்தி செந்நாயை கிருஷ்ணா வீழ்த்துவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தின் இறுதிக் காட்சியிலும் செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் காட்சி படமாக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறப் போகும் இந்தப் படத்தின் பட்ஜெட் கிருஷ்ணா நடித்த படங்களிலேயே அதிகபட்ச பட்ஜெட் படமாகும்.

இந்த படம் கிருஷ்ணாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படும் என இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றிருக்கும் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

Read Previous

விமல், ஆஷ்னா நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

Read Next

நான்தான் ‘ஏஞ்சலினா’, கிரிஷா க்ரூப் மகிழ்ச்சி