காதலித்தவர்கள், காதலில் ஊறியவர்களால் மட்டுமே ஒரு சிறந்த காதல் படத்தைக் கொடுக்க முடியும். இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை, சினிமா மீது ரசனையான காதல் கொண்ட அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.
இளையராஜா இசையமைத்த படங்களில் கூட அவருடைய பாடல்களை திரும்பத் திரும்ப இந்த அளவிற்குப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் படத்தில் இளையாராஜாவின் பாடல்கள் நமக்கு ஒரு கதாபாத்திரமாகவே உள்ளுக்குள் இறங்கிவிடுகின்றன.
1989ல் வெளிவந்த ‘இதயத்தை திருடாதே’ படத்தில் இடம் பெற்ற ‘ஓ பாப்பா லாலி’ பாடலை 30 வருடங்கள் கழித்து இந்த 2019ல் திரையில் மீண்டும் கேட்டாலும் ஏதோ நேற்று வெளிவந்த ஒரு பாடல் போலவே ஒலிக்கிறது. அந்த அளவிற்கு காட்சிகளுக்குத் தகுந்தபடி இளையராஜாவின் பாடல்களை இந்தப் படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் ரசனையை வெளிக்காட்டுகிறது.
சாதி வெறி பிடித்த மாரிமுத்துவின் மகன் ரங்கராஜ், கொடைக்கானலில் ராஜகீதம் என்ற பெயரில் சினிமா பாடல்களை ரெக்கார்டிங் செய்து தரும் கடையை நடத்துகிறார். அந்த ஊரில் சர்க்கஸ் நடத்த வரும் வட இந்தியப் பெண்ணான ஸ்வேதா திரிபாதியின் அழகு ரங்கராஜை காதலில் வீழ்த்துகிறது. சிலபல சந்திப்புகளுக்குப் பின் காதலர்கள் ஆகிறார்கள் ரங்கராஜ், ஸ்வேதா. இவர்கள் காதல் மாரிமுத்துவுக்குத் தெரியவர, ஓடிப் போன காதலர்களைக் கண்டு பிடித்து மீண்டும் ஊருக்கு அழைத்து வந்து இருவரையும் பிரித்து வைக்கிறார். ஸ்வேதாவின் சர்க்கஸ் கூட்டம் அந்த ஊரை விட்டே கிளம்புகிறது. காதலர்கள் பிரிகிறார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு ஸ்வேதாவின் மகள், தன் அம்மாவின் காதலன் ரங்கராஜைத் தேடி கொடைக்கானல் வருகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
காதல் கதை என்றாலே அதில் புதுமுகங்கள் நடித்தாலும், காதலை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் அவர்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதை இயக்குனர் சரியான கதாபாத்திரங்களாக வடிவமைத்து, காதலையும் சொல்லியிருப்பதால் ரங்கராஜ், ஸ்வேதா இருவருமே புதுமுகங்கள் என்பதையும் மீறி நம் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அதிலும், ஸ்வேதாவின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு அடிக்கடி கண்முன் வந்து போகிறது.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் கூட பொருத்தமான தேர்வு. ரங்கராஜ் அப்பா மாரிமுத்து, ஸ்வேதாவின் அப்பா சன்னி சார்லஸ், கணவர் ஜாதவ், பாதிரியார் வேல ராமமூர்த்தி, நண்பன் ஆர்ஜே விக்னேஷ் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.
இளையராஜாவின் பாடல்கள் படத்தில் அடிக்கடி ஒலிப்பதால், அவற்றையும் மீறி சிறந்த பாடல்களைக் கொடுக்க வேண்டும் என ஷான் ரோல்டன் உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகு அற்புதம்.
காதல் உணர்வை இன்னும் உள்ளுக்குள் இறக்கும்படியான காட்சிகளை வைத்திருக்கலாமோ என்று மட்டும் படம் முடிந்த பின் நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. கதாபாத்திரங்கள், கதைக் களம் ஆகியவற்றில் செலுத்திய கவனத்தை, திரைக்கதையில் இன்னும் செதுக்கியிருக்கலாம் என்பது மட்டுமே சிறு குறையாகத் தெரிகிறது.
ஆனாலும், கைகளுக்கு அழகு மெஹந்தி, காதலுக்கு அழகு இந்த மெஹந்தி சர்க்கஸ்.