‘காஞ்சனா’ படம் என்றாலே முதல் பாகமோ, இரண்டாம் பாகமோ டிவியில் போடுகிறார்கள் என்றாலே நமது வீட்டில் உள்ள குழந்தைகள் அந்தப் படத்தைப் பார்க்க உட்கார்ந்துவிடுவார்கள்.
பேய்ப் படத்தைக் கூட காமெடி படமாகக் கொடுத்து ரசிக்க வைத்தவர்தான் ராகவா லாரன்ஸ். காஞ்சனா வரிசையில் 3வது படம், முனி வரிசையில் 4வது படம் என இந்த ‘காஞ்சனா 3’ படத்தையும் நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன், பேய் பயம் என நகர்த்தி இரண்டரை மணி நேரமும் ரசிக்க வைக்கிறார் ராகவா லாரன்ஸ்.
மாற்றுத் திறனாளிகள், அனாதைகள் என பலரையும் தன் ஆசிரமத்தில் வளர்ந்து ஆளாக்கும் ராகவா லாரன்சை ஒரு மந்திரியும், அவரது மகனும் ஒரு தவறைச் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், அதைச் செய்ய மறுக்கும் ராகவாவைவையும், அவரது காதலியையும் லாரி ஏற்றிக் கொலை செய்கிறார்கள். ராகவா லாரன்ஸ், அவரது காதலி ஆகியோரது ஆவி, முந்தைய பாகங்களைப் போல ராகவா லாரன்ஸ் உடம்புக்குள் புகுந்து தன்னைக் கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
சிறு வயதிலேயே வைட்டமின் டி குறைவால் தலை முடி வெள்ளையாகிப் போன ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ். இவர்தான் ஆசிரமம் நடத்துபவர். அந்தப் பகுதி குப்பத்து மக்களுக்கு தெய்வம் போன்றவர். ஆக்ஷனில் அதிரடி காட்டுகிறார் இந்த காளி. முந்தைய பாகங்களில் இருந்த அதே பயந்த சுபாவம் கொண்ட மற்றொரு கதாபாத்திரத்தில் இரண்டாவது ராகவா லாரன்ஸ். இவருக்கு முறைப் பெண்களைக் காதலிப்பது மட்டும்தான் வேலை. பேய் புகுந்து கொண்டபின் அவர் நடிக்கும் நடிப்பு, தியேட்டரில் அடேங்கப்பா என கைதட்டுகிறார்கள்.
ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி என மூன்று ஹீரோயின்கள். மூவருமே கிளாமரில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ராகவா லாரன்சைத் துரத்தித் துரத்தி காதலிப்பது மட்டுமே இவர்களது வேலை. நான்காவது கதாநாயகியாக வெள்ளைக்கார நடிகை ஒருவர். இவர் தமிழ்ப் பெண்ணைப் போல ஆடையணிந்து துளியும் கிளாமர் காட்டாமல் நடித்திருக்கிறார்.
‘காஞ்சனா’ முதல் பாகத்தில் நகைச்சுவையில் கலக்கிய கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் கூட்டணி மீண்டும் இந்த மூன்றாம் பாகத்தில் கூட்டணி அமைத்து தியேட்டரை அதகளப்படுத்துகிறது. குட்டீஸ்களுக்காகவே இவர்களது காமெடி.
அண்ணன், தம்பி வில்லன்களாக தருண் அரோரா, கபீர் சிங். படத்தில் சூரியும் துணை நடிகர் போல சில காட்சிகளில் வருகிறார். ஆனால், அவரால் சிரிக்க வைக்க முடியவில்லை.
டூபாடு வழங்கிய பாடல்கள். முற்றிலும் கமர்ஷியலை மனதில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட பாடல்கள். பின்னணி இசையில் தமன் வாசித்துத் தள்ளுகிறார்.
படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடி. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிகப் பிரம்மாண்டம்.
மூவர் ஹீரோயின் அணியின் கிளாமரை மட்டும் படத்தில் குறைத்திருக்கலாம். லாஜிக் பற்றியெல்லாம் கேள்வி கேட்காமல் கோடை விடுமுறையை குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டாடலாம்.