வெள்ளைப் பூக்கள் – விமர்சனம்

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் தயாரித்து, இயக்கி உருவாக்கியுள்ள படம். படத்தில் பணியாற்றியுள்ள பல தொழில்நுட்பக் கலைஞர்களும் அதில் அடக்கம்.

தமிழ் சினிமாவின் மீதுள்ள காதலால் இப்படி ஒரு படத்தைக் கொடுத்த அவர்களது முயற்சிக்கு நமது வாழ்த்துகள்.

அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களை நடிக்க வைப்பதை விட, தன் கதையின் நாயகனாக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்கை நடிக்க வைத்திருக்கிறார். அதற்கே அவருக்கு ஒரு தனி வணக்கம் வைக்க வேண்டும்.

அதிலும் கதையின் நாயகன் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. உடல் வலிமையைவிட மூளை வலிமையை அந்தக் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அமெரிக்கப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அமெரிக்காவில் வசிக்கும் மகன் மீது கோபம் கொண்டு அங்கு செல்லாமல் இருக்கும் விவேக், மேலதிகாரி சொன்னதால் அமெரிக்கா செல்கிறார். அங்கு அடுத்தடுத்து சில க்ரைம் சம்பவங்கள் நடக்கின்றன. பக்கத்து வீட்டுப் பெண், ஒரு இளைஞர் காணாமல் போக விசாரணையில் திறமைசாலியான விவேக், அந்த வழக்கை அமெரிக்க போலீசுக்குத் தெரியாமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் மகனே கடத்தப்பட அதிர்ச்சியடைகிறார். அத்தனை கடத்தல்களைச் செய்தது யார் என்பதை விவேக் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

30 வருடங்களாக நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் விவேக், கடந்த சில வருடங்களில் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், அவற்றைக் காட்டிலும் இந்தப் படத்தில் தனக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து அதில் அவருடைய வழக்கமான நகைச்சுவையை தவிர்த்துவிட்டு, குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். விசாரணை என்ற பெயரில் பேசுவதை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

விவேக்கின் அமெரிக்க நண்பராக சார்லி, மகனாக தேவ், மருமகளாக பெய்ஜ் ஹென்டர்சன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் முழு கதையும் நகர்கிறது. நாம் அதிகமாகப் பார்க்காத அமெரிக்க கிராமத்து அழகையும், சியாட்டில் நகர அழகையும் அருமையாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர். ராம்கோபால் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படம் போல ஒரு பரபரப்பான க்ரைம் திரில்லர் இந்தப் படம். புதியவர்களின் புதிய முயற்சிக்கு தமிழ் சினிமா ரசிகர்களும் ஆதரவு தந்தால் இம்மாதிரியான இன்னும் பல வித்தியாசமான படைப்புகள் வெளிவரும்.

Read Previous

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்

Read Next

காஞ்சனா 3 – விமர்சனம்

Most Popular