‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் படம் ‘ராவண கோட்டம்’.
தொழிலதிபர் கண்ணன் ரவி, கண்ணன் ரவி குரூப் சார்பில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார்.
தனது முதல் தயாரிப்பு குறித்து கண்ணன் ரவி கூறும்போது,
“வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்த எனக்கு, இந்திய மண்ணின், குறிப்பாக தமிழ்நாட்டின் உள்ளார்ந்த மண் சார்ந்த மதிப்புகளை வலியுறுத்துகின்ற திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் உண்டு. நான் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்த போது, அத்தகைய ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க ஆவலோடு இருந்தேன். அது என் சொந்த ஆர்வத்தின் காரணமாக மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டின் மண் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி. இந்த சூழ்நிலையில் தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அவர்களை நான் சந்தித்தேன். அவர் ஒரு கதையை சொன்னார். உண்மையில் நான் தேடிக் கொண்டிருந்த விஷயங்களுக்குப் பொருத்தமான ஒரு கதையாக அது இருந்தது.
நாயகனை தேர்ந்தெடுக்கும் போது தனிப்பட்ட இமேஜ் உடைய ஒரு நட்சத்திர நடிகரை நடிக்க வைக்க விரும்பவில்லை, மாறாக மண்ணின் மைந்தனாக, கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதில் சாந்தனு நடிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்றார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் படம் பற்றிக் கூறுகையில்
“மதயானைக் கூட்டம்’ வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்குக் கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.
சாந்தனு பாக்யராஜ் அவரது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்குத் தயாராக மிகவும் கடுமையாக உழைப்பவர். அவர் இந்தப் படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில்தான் உரையாடுகிறார்.
நகரத்து பையனாக இருந்து, கிராமத்துப் பையனாக, தோற்றம் உட்பட அனைத்திலும் மாறிய அவரைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நடிப்பிலும் இதே போல சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். ‘ராவண கூட்டம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
நாயகனைப் போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியைத் தேடி வருகிறோம். அப்பாவித்தனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு குணாதிசயம் தான் நாயகியினுடையது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சிறப்பான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறோம். அவற்றை உரிய நேரத்தில் அறிவிப்போம்,” என்கிறார் இயக்குனர்.