‘மான்ஸ்டர்’, என்னோட முதல் ‘யு’ படம் – எஸ்ஜே சூர்யா

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மான்ஸ்டர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது,

“பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-உடன் இது என்னுடைய இரண்டாவது படம். என் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்கு பிரகாஷ் பாபு, பிரபு, வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றி. நான் எப்போதும் வீட்டுப்பாடம் செய்துவிட்டு தான் பணிக்கு வருவேன். ஆனால் இப்படத்தில் அதெல்லாம் போதவில்லை.

இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் எலி என்ற புள்ளியில் தான் ஆரம்பமாகும். அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை எலி பிடிக்க ஆள் வைத்திருக்கிறார்கள். மனித இனத்திற்கு இணையாக இருக்கும் விலங்கு எலிதான். மனிதனை அழிக்கக்கூடிய ஆள் பலத்தோடு இருப்பது எலிதான். எலிக்கு கோயிலே இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கூறியதும் அவர் ஒரு காட்சியை நடித்துக் காண்பித்தார். காலையிலிருந்து மாலை வரை தனியாகவே நடிப்பார் எஸ்.ஜே.சூர்யா. பிரியா பவானி ஷங்கர் இக்கதையை திரையில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன் என்றார். எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் கலாட்டா செய்து கொண்டும், போட்டிபோட்டுக் கொண்டும் நடிப்பார்கள்.

இக்கதையின் கருவை கூறியதும் எழுத்தாளர் ஷங்கர் தாஸ் நம்பவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியாக எடுக்க எடுக்க என்னைவிட ஆர்வமாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். சிவசங்கர் நானே போதும் என்று கூறினாலும் அவர் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடின முயற்சியை மேற்கொண்டார். கோகுலுக்கும் எனக்கும் நெருக்கமான உறவு. அதேபோல், உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கிடையாது.

இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம். எங்கு சென்றாலும் பிரியா பவானி ஷங்கருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் பிரியாவின் கதாபாத்திரத்தை நன்றாக அமைத்திருக்கிறோம். ஐந்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று கவனத்துடன் உழைத்திருக்கிறோம். எலியுடன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை எஸ்.ஜே.சூர்யாவே பாடியிருக்கிறார்.

பிரபாகரன் சினிமாவை தவிர்த்து வேறு எதையும் பேசி நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியும் தரமாக வரவேண்டும் என்று எப்போதும் கூறுவார். எஸ்.ஆர்.பிரபு தேவையில்லாத அடையாளங்களை விரும்பமாட்டார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தேவையான விஷயங்களை முன்பே கூறிவிடுவார். இப்படம் நன்றாக வருவதற்கு முக்கியகாரணம் என் நண்பர்கள் தான். அதில் கமல்தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

என் வீட்டில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம்தான் இப்படம். மூன்று நாட்கள் ஒரு எலி என்னைத் தூங்க விடாமல் செய்தது. அதேபோல் அனுபவம் பெரும்பாலானோருக்கு நடந்திருக்கும். அந்த சம்பங்களின் தொகுப்பே இப்படம் என்றார்.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,

இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தையும் தரமானதாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் அவர்களின் படைப்புகள் வெளியாகும்.

ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா ? என்றார். கதை சொல்ல வந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.

குழந்தைகளுக்கும்… செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.

இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார்.

எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’.

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் என் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வேன்.

தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நுணுக்கமாக பணியாற்றியிருக்கிறார்கள். 17 நாட்களுக்குள் இப்படத்தை வெளியாக முயற்சி எடுத்திருக்கிறார்கள். ‘மாயா‘, ‘மாநகரம்’ , ‘மான்ஸ்டர்‘, போன்ற தரமான படத்தைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வாழ்த்துக்கள்,” என்றார்.

மான்ஸ்டர் மே 17ம் தேதி வெளியாகிறது.

Read Previous

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’

Read Next

சிவகார்த்திகேயன் 16வது படம் இன்று ஆரம்பம்