கதை
1980களில் நடக்கும் கதை. மனைவி இரண்டு மகன்கள், ஒரு மகள் என கிராமத்தில் வசிப்பவர் தனுஷ். அவருடைய குடும்பத்து சொத்தாக இருக்கும் 3 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார் பக்கத்து ஊர் பெரிய மனிதர் ஆடுகளம் நரேன். அதனால் தொடரும் தகராறில் தனுஷின் மூத்த மகன் கொல்லப்படுகிறான். பதிலுக்கு நரேனை தனுஷின் சிறுவனாக இருக்கும் இளைய மகன் கென் கருணாஸ் கொலை செய்கிறார். அவர்களிடம் சிக்காமல் இருக்க தனுஷ் குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். நீதிமன்றத்தில் சரணடைய விரும்புகிறார் தனுஷ். அதைச் செய்ய விடாமல் தனுஷ் மற்றும் குடும்பத்தினரைக் கொல்லத் துடிக்கிறது நரேன் குடும்பம். இவர்களது போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
40, 50 வயதுள்ள நடுத்தரக் குடும்பத்து ஏழை, விவசாயி ஆக தனுஷ். ஒல்லியான தேகம், கத்தையான மீசை, லேசாக நரைத்த தாடி, கொஞ்சம் தளர்ந்த நடை, அனுபவப் பேச்சு, குடும்பத்தினர் மீது அதிக பாசம் என சிவசாமி கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்றைய முன்னணி நடிகர்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரம். அதில் நடித்ததோடு மட்டுமல்லாமல், இதுவரையிலும் அவர் இப்படி நடித்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அப்படி ஒரு நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். இந்த வருட தேசிய விருதுக்கான போட்டியில் வெல்வதில் தனுஷைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
மிகவும் தாமதமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய பேச்சியம்மாள் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர். வேறு எந்த நடிகையரும் கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கலாம். ஆனாலும், மஞ்சு வாரியர் போல அவர்களால் இத்தனை நேர்த்தியாக ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்துவிட முடியாது என்று தாராளமாகச் சொல்லலாம். சொந்தக் குரலில் வேறு பேசியிருக்கிறாராம் மஞ்சு.
தனுஷ், மஞ்சு வாரியர் பெயரை இப்போதே தேசிய விருதுப் பட்டியலில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை என எழுதி வைத்துவிடுங்கள். அது மட்டுமல்லாமல் பல விருதுகள் அவர்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது-
தனுஷ் கூடவே படம் முழுவதும் இருக்கும் அவருடைய இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஸ். அப்பா செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி அப்பாவையே விமர்சிக்கும் ஒரு கதாபாத்திரம். தன் அண்ணன் இழப்பைத் தாங்க முடியாமல், அம்மா தவிப்பதைப் பார்க்க முடியாமல் திட்டம் போட்டு, உருண்டை (கிராமத்து வெடிகுண்டு) உருட்டி, ஆடுகளம் நரேனை ஒரே வெட்டில் சாய்த்து கொலை செய்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனக்குத் தெரியும் என அப்பா தனுஷிடமே சவால் விடுபவர், நடிப்பிலும் சாதித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கென்னுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
தனுஷ் மச்சான் ஆக பசுபதி, வக்கீலாக பிரகாஷ் ராஜ். அவர்கள் இருவரின் நடிப்பிலும் அனுபவம் பேசுகிறது. அவர்கள் வரும் காட்சிகளில் வழக்கம் போல தனி முத்திரை பதித்துவிடுகிறார்கள்.
தனுஷ் மூத்த மகனாக டீஜே அருணாச்சலம். எதற்கும் பயப்படாத துணிச்சலான கதாபாத்திரம். நரேனை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதால், கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை நமக்குள் புகுத்தி விடுகிறார்.
சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, நரேன், பவன் அவர்களது நடிப்பைப் பேச வைக்கிறார்கள்.
படத்தில் ஒவ்வொருவரின் நடிப்பைப் பற்றியும், படத்தில் உள்ள பல நுணுக்கங்கள் பற்றியும் எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். அது ‘அசுரன்’ திரைக்கதை, வசனம் புத்தகத்தை விடவும் அதிகமாக வரும்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பு இந்தப் படம். வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியிடமிருந்து இன்னும் பல வித்தியாசமான படங்கள் வரும் என்பதற்கு இந்தப் படம் அதீத நம்பிக்கை அளித்துள்ளது.
இசை, மற்றவை
ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் காட்சியிலேயே தன் திறமையை வெளிப்படுத்தி விடுகிறார். நல்ல கூட்டணி இணையும் போது எப்படியான தரமான படைப்பு வெளிப்படுகிறது என்பதற்கு வெற்றிமாறன், தனுஷ், ஜிவி பிரகாஷ் கூட்டணி ஒரு உதாரணம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத் தொகுப்பாளர் ராமர் அசுரனுக்கு நல்ல கூட்டாளிகளாக இருந்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். சுகா, வெற்றிமாறனின் வசனங்கள் பல இடங்களில் ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகிறது.
+
படிப்பை மட்டுமே யாரும் பறிக்க முடியாது என்ற உயர்ந்த கருத்தைச் சொன்னதும், சாதீய கொடுமைகளை தெளிவாக விளக்கியதும், அனைவரின் நடிப்பும், உழைப்பும்.
–
கத்தி, வெட்டு, ரத்தம், கொலைகள்