பீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை இணைத்து உருவாகும் திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், புதிய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’.
ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர். டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
145 விநாடிகள் நீளும் டிரெய்லரில் கல்லூரி கலாட்டா, காதல், நகைச்சுவை மற்றும் வண்ணமயமான காட்சிகள் என படத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவனாக மனோ சேர்வதால் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவையான சூழல்களையும் மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, கலகலப்பான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் என டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீதேவி, ‘ஹைக்கூ’ படத்திலும் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஃபெமினா ஜார்ஜும் தனது நடிப்பாலும் திரை இருப்பாலும் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோரின் திரை கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘ஹைக்கூ’ படம் குறித்து நடிகர் ஏகன் கூறுகையில், “இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி படம் என்றாலும், அதற்குள் ஆழமான கருத்தும் இருக்கிறது. ‘டோரதி’ படத்தைப் பார்த்த பிறகு மற்றவர்களின் தேர்வுகளையும், தனிப்பட்ட உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உருவானது. அதேபோல், ‘ஹைக்கூ’ படமும் பெண்களை ஆண்கள் பார்க்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், பெண்களை மதிப்பதன் அவசியத்தையும் பேசுகிறது.
ஆனால், எந்த ஒரு கருத்தையும் வலியுறுத்தி போதிக்கும் படமாக இது இருக்காது. கதையோட்டத்துடன் அந்த கருத்தை இயல்பாக இணைத்து, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் ‘ஹைக்கூ’ நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்றார்.
ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோருடன் அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்ய, சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பிரேம் கருந்தமலை கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். காதல், நகைச்சுவை மற்றும் இளமைத் துள்ளல் நிறைந்த இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.