‘கல்கி 2898 எடி’ படத்தின் வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, கமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கல்கி 2898’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை உருவாக்கியுள்ளது.
கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால், இந்தப் படத்தினை கடும் சிரத்துடன் உருவாக்கி வருகிறது படக்குழு. முதலில் ஜனவரி வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால் பின்வாங்கியது.
அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு மே 9- ம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக அறிவித்து பணிகளை துரிதப்படுத்தியது. தற்போது அதற்கும் வாய்ப்பில்லை. ஏனென்றால் ஆந்திராவில் மே 13-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
மே 11-ம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இந்தச் சமயத்தில் பட வெளியீடு சாத்தியமில்லை. இதனால் மீண்டும் தங்களுடைய முதலீட்டாளர்களுடன் புதிய வெளியீட்டு தேதி குறித்து கலந்து ஆலோசிக்கவுள்ளது படக்குழு.
விரைவில் புதிய வெளியீட்டுத் தேதியுடன், படத்தின் டீஸரை வெளியிட தீர்மானித்துள்ளது படக்குழு.