லவ் 3.ஓ – மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா

இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் 3.ஓ’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில், வாய்ப்புக்காக ஏழு ஆண்டுகளாகப் போராடியதாகவும், தனக்கு வாய்ப்பு வழங்க மறுத்தவர்களால்தான் இன்று இயக்குநராகவும் நடிகையாகவும் வளர்ந்திருப்பதாகவும் படத்தின் இயக்குநரும் கதாநாயகியுமான ஆர்னிகா கண்ணீர் மல்கப் பேசினார்.

மூன்று தலைமுறைகளில் காதல் எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 1990-களில் காதல், 2000-ஆம் ஆண்டுகளின் காதல் மற்றும் எதிர்காலத்தில் காதல் அணுகப்படும் விதம் ஆகியவற்றைச் சித்தரிக்கும் இப்படத்தில், செயற்கை நுண்ணறிவுக்கும் காதலுக்கும் இடையிலான உறவும் முக்கியக் கருப்பொருளாக இடம்பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ எனப் பிரபலமான ஆர்னிகா, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும், கதாநாயகியாக நடித்துள்ளதுடன் படத்தையும் இயக்கியுள்ளார்.

சிவகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், கோயம்புத்தூர் மாப்ள மற்றும் கே.என். ஸ்மைலி என அறியப்படும் கார்த்திகேயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்ய, வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பிரசன்ன குமார் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் பேரரசு, நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஆர்னிகா,

“நாங்கள் இன்ஸ்டாகிராம் உலகிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்திருக்கிறோம். செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். ஒரு கதாநாயகன் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கிறான். அவர்களுடைய காதல் என்னவாகிறது, திருமணம் செய்துகொள்கிறார்களா அல்லது பிரிகிறார்களா என்பதே கதையின் மையம். மேலும், காதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிவபெருமான் கைலாயத்திலிருந்து இறங்கி வருவதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.

நான் ஏழு ஆண்டுகளாக வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறேன். ஆயிரம் ஆடிஷன்களுக்குச் சென்றிருப்பேன். சிலர் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வரச் சொன்னார்கள். ஒரு குறும்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக்காகக்கூட இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன். அப்போது எனக்கு உரிய வாய்ப்புகள் கிடைத்திருந்தால், இன்று நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

இன்று இந்தப் படத்தில் கதாசிரியர், பாடலாசிரியர், உடை அலங்கார நிபுணர், கலை இயக்குநர், இணைத் தயாரிப்பாளர், கதாநாயகி, இயக்குநர் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறேன். இதற்காக எனக்கு வாய்ப்பு வழங்காதவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் சில விஷயங்கள் தாமதமாகும்போது, அது நம்மை வேறொரு உயரத்துக்குக் கொண்டு செல்வதற்காகவும் இருக்கலாம்.

நமக்கு ஒன்று தேவைப்பட்டால், அதற்காக நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்; போராட வேண்டும். யாரும் நமக்காகப் போராட வரமாட்டார்கள். இந்த மேடையில் நிற்பதையே ஒரு வெற்றியாகக் கருதுகிறேன். என்னைப் போன்ற திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனக்கு ஒரு வெற்றியை வழங்கினால், வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பலரையும் திரைத்துறைக்குள் அழைத்து வருவேன். எனவே, எங்கள் படத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான இளம் கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘லவ் 3.ஓ’ திரைப்படம், தலைமுறைகளுக்கு ஏற்ப மாறும் காதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

Read Previous

கிங் – புதிய போஸ்டர் வெளியீடு