மிஷ்கினுக்கு நன்றி சொல்லி, இயக்குநர் ஆன விஷால்

மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து, இயக்குநராக முதல் வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார் விஷால்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘துப்பறிவாளன்’. அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. விஷாலே தயாரித்து, நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் விஷால் – மிஷ்கின் இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இதனால் இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கினை விலக்கினார் விஷால்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டே, ‘துப்பறிவாளன் 2’ படத்தின் கதை விவாதப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் விஷால். தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தினை தானே இயக்கி நடிக்கவிருப்பதை உறுதிச் செய்து வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விஷால் கூறியிருப்பதாவது:

“25 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டு எங்க அப்பாவிடம் போய் சொன்னேன். அப்போது அர்ஜுன் சாரிடம் உதவி இயக்குநராக அப்பா சேர்த்துவிட்டார். அதற்குப் பிறகு என்னை ஸ்கிரீன் டெஸ்ட் செய்து இவன் நடிப்பதற்கு சரியாக இருப்பான், எப்ப வேண்டுமானாலும் இயக்குநராகலாம் என்று அனுப்பிவிட்டார். அதற்குப் பிறகு நடிகனாகி, எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆதரவு தெரிவித்துவரும் அனைவருக்கும் நன்றி.

நடிகராக பயணிக்கும் போது இயக்குநராக வேண்டாம் என இருந்துவிட்டேன். 25 ஆண்டுகள் கழித்து அதற்கான நேரம் வந்துவிட்டது. தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. ஆம், ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வதற்காக லண்டன் போகிறேன். மே மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டேன். லண்டன், அஜர்பைஜான், மல்டா ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ளேன்.

ஒரு இயக்குநராக உங்கள் முன் பேசிக் கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடைய கனவு, ஆசையை சரியாக வைத்துக் கொண்டு உழைத்தால், எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டாமானாலும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

இந்த தருணத்தில் எங்க அப்பா, குருநாதர் அர்ஜுன் சார் மற்றும் மிஷ்கின் சார் ஆகியோருக்கு நன்றி. எந்தக் குழந்தையையும் நிஜ வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் கைவிட்டதில்லை. உங்கள் குழந்தையையும் தத்தெடுத்து அதை சரியான முறையில் கரைச் சேர்ப்பதற்கு கடுமையான முறையில் வேலை செய்வேன்.”

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Read Previous

‘புஷ்பா’வில் பாடலுக்கு நடனம்: சமந்தா அதிருப்தி

Read Next

’கல்கி 2898 எடி’ வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ?

Most Popular