இயக்குநர் லோகேஷ் கனகராஜை மறைமுகமாக சாடியுள்ளார் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சி
‘தேசிங்குராஜா 2’ மற்றும் இயக்குநர் எழிலின் 25-வது ஆண்டு விழா ஆகிய இரண்டும் ஒரே மேடையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் எழிலுடன் பணிபுரிந்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள்.
இதில் இயக்குநர் எஸ்.ஏ.சியும் கலந்துக் கொண்டு பேசினார். அதில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் விஜய்யின் திரையுலக வாழ்வில் எவ்வளவு முக்கியமான படம் என்பதையும் தனது பேச்சில் எடுத்துரைத்தார். மேலும், இன்றைய இயக்குநர்கள் திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், படங்களில் ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமன்றி, தனது பேச்சில் மறைமுகமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் சாடினார். ‘லியோ’ படத்தின் பெயரைக் குறிப்பிடாமல், எஸ்.ஏ.சி பேசியதாவது:
“சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு இயக்குநரை தொலைபேசி வாயிலாக பாராட்டினேன். முதல் பாதி அருமை சார், ஒரு படம் எப்படி இயக்க வேண்டும் என்று உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினேன்.
ஆனால், இரண்டாம் பாதி சரியில்லை சார் என்று கூற ஆரம்பித்தவுடனே, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் சார் எனத் தெரிவித்தார். இத்தனைக்கும் படம் வெளியாக 5 நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன்.
எனக்கு மதங்கள் மீதெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால், ஒரு தகப்பனே பிள்ளையை எல்லாம் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் சார் அப்புறம் கூப்பிடுகிறேன் என்று வைத்துவிட்டார்.
பின்பு கூப்பிடவே இல்லை. படம் வெளியான பிறகு, அனைவருமே வைத்துச் செய்தார்கள்.
படம் வெளியாக 5 நாட்கள் இருக்கும் போது, தான் சொல்லியதை வைத்து மாற்றியிருக்கலாம்.
படம் வெளியான பிறகு அத்தனை விமர்சனங்களுமே, தான் சொல்லியதைத் தான் கூறியிருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் தைரியம், பக்குவம் இல்லை”
இவ்வாறு எஸ்.ஏ.சி பேசினார்.
‘லியோ’ படத்தில் சஞ்சய் தத் தனது மகளையே நரபலி கொடுப்பது போன்ற காட்சி இருக்கும்.
இதைத் தான் மறைமுகமாக எடுத்துரைத்துள்ளார் எஸ்.ஏ.சி. இந்தப் பேச்சு தான் தற்போதைய சமூக வலைதளத்தின் பேச்சுப் பொருளாக இருந்து வருகிறது.