‘வேள்பாரி’ முயற்சியை கைவிட்ட ஷங்கர்

‘வேள்பாரி’ நாவல் படமாக்கும் முயற்சியை கைவிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதில் முதலாவதாக ‘இந்தியன் 2’ வெளியாகவுள்ளது. 

இந்த மூன்று படங்களை முடித்துவிட்டு, ஜெயந்திலால் கட்டா தயாரிக்கும் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

ரன்வீர் சிங் – ஷங்கர் இணையும் படத்தினை ஜெயந்திலால் கட்டா தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்தக் கூட்டணியில் ‘அந்நியன்’ இந்தி ரீமேக் உருவாதாக இருந்தது. 

அதில் இருந்த சிக்கலால், ’வேள்பாரி’ நாவலை இந்தியில் உருவாக்கலாம் என்று இந்தக் கூட்டணி திட்டமிட்டது.

அதனை 3 பாகங்கள் கொண்ட படமாக எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்பு, ‘இந்தியன் 2’ படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் ஷங்கர். 

இதனிடையே, தற்போது ‘வேள்பாரி’ நாவலை படமாக்கும் முயற்சியினை கைவிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருப்பதால், தேவையின்றி எந்தவொரு சர்ச்சையிலும் சிக்க வேண்டாம் என்று முடிவு இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இயக்குநர் ஷங்கர் – ரன்வீர் சிங் கூட்டணி இப்போதைக்கு இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Read Previous

சூர்யாவுக்கு நாயகியாகும் ஜான்வி கபூர்

Read Next

லோகேஷ் கனகராஜை மறைமுகமாக சாடிய எஸ்.ஏ.சி