மிரட்டலான உருவாக்கத்தில் வெளிவர உள்ள ‘கொலை’

இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, தனஞ்செயன், ஆர்விஎஸ் அசோக் குமார், டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, பி.பிரதீப், விக்ரம் குமார்.எஸ், சித்தார்த் சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்க, பாலாஜி கே குமார் இயக்கியுள்ள படம் ‘கொலை’.

இப்படத்தில்  விஜய் ஆண்டனி, மீனாட்சி செளத்ரி, ரித்திகா சிங், சித்தார்த் சங்கர், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி குமார் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 

“1923 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை படித்தேன். அந்த வழக்கு முடிக்கப்படவில்லை. ஆனால், பல எழுத்தாளர்கள் அந்த கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார்கள். அப்போது அவர்களின் எண்ணத்தை வைத்து, அந்த வழக்கை முடிப்பது போல் எழுதியிருந்தார்கள். அவற்றை எல்லாம் படித்த போது தான், என்னுடைய ஐடியா மூலம் இந்த வழக்கை முடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன், அப்படி உருவானது தான் கொலை கதை. 

இப்படத்தின் கதையை எழுதுவதற்கு மட்டும் ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன். அதே போல் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கும் அதிக நாட்கள் தேவைப்பட்டது. அதனால் தான் படம் நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டது. 

இந்த கதை நன்றாக இருக்கிறது, விஜய் ஆண்டனிக்கு பொருத்தமாக இருக்கும், அவரிடம் கதை சொல்லுங்கள் என்று என் நண்பர் கூறினார். அவரும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால், அவரை எனக்குப் பிடிக்கும். அதன்படி விஜய் ஆண்டனியிடம் இந்தக் கதையை நான்கரை மணி நேரத்தில் சொன்னேன். ஆனால், அவர் அரை மணி நேரத்திலேயே கதையை புரிந்து கொண்டார். அவர் சிபாரிசு செய்த தயாரிப்பு நிறுவனம் தான் இன்பினிட்டி. அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டும். நான் கேட்டதை எல்லாம் புரிந்து கொண்டு தாரளமாக செலவு செய்தார்கள். அதனால் தான் படம் தரமாக வந்திருக்கிறது.

பொதுவாக மர்டர் மிஸ்டரி ஜானர் படங்கள் அனைத்திலும் ஒரு டெம்ப்ளெட் இருக்கும். பல திருப்புமுனைகள், குழப்பங்கள் என அனைத்தும் இருக்கும், அதை வித்தியாசமான முறையிலும் சொல்வார்கள், ஆனால் இறுதியில் கொலையின் பின்னணி மற்றும் ரகசியம் துப்பறிவாளன் மூலமாகத் தான் தெரிய வரும். ஆனால், அந்த பாணியை உடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அதற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்திருப்பதும் புதிதாக இருக்கும்.

படம் ரொம்ப ஸ்டைலிஷாகவும், மேக்கிங் வித்தியாசமாகவும் இருப்பதால் ஏ செண்டர் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என்று நினைப்பது தவறு. விஜய் ஆண்டனியே என்னிடம், நான் சி சென்டர் ரசிகன் சார், எனக்கு படம் பிடிக்குது, என்றார். தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்களில் ஏ,பி,சி என்ற பிரிவே இல்லை. எல்லோரும் அனைத்துவிதமான படங்களையும் பார்க்கிறார்கள். 

மொழி தெரியவில்லை என்றாலும், ஒரு திரைப்படத்தின் விஷுவலை ரசிக்கிறார்கள். அப்படித் தான் ‘கொலை’ படமும் இருக்கும், விஷுவலாக அனைத்து தரப்பினரையும் படம் நிச்சயம் ஈர்க்கும்,” என்றார்.

 தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் படம் பற்றி பேசுகையில்,

“இந்தப் படம் காலதாமதம் ஆனதற்கு படத்தின் மேக்கிங் தான் காரணம். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் பாலாஜி குமார் செதுக்கியிருக்கிறார். நாங்கள் அவரிடம் ஒவ்வொரு முறையும் படம் எப்போது முடியும் என்று கேட்கும் போதெல்லாம், அவர் ஒரு காட்சியைக் காட்டுவார், அதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். எடுக்கும் போது அந்த காட்சி சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் அதை இயக்குநர் மெருகேற்றிய விதம் வேற  மாதிரி இருக்கும், அது தான் கிராபிக்ஸ்.  கிராபிக்ஸை எப்படி பயன்படுத்துவது, அதன் மூலம் ஒரு காட்சியை எப்படி மெருகேற்றுவது என்று பல விஷயங்களை இந்தப் படம் மூலம் நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம். நிச்சயம் படம் மேக்கிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, பிலிம் மேக்கிங்கில் ஒரு பெஞ்ச்மார்க் படமாக அமையும்,” என்றார்.

Read Previous

மாமன்னன் வெற்றி; இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கிய உதயநிதி!

Read Next

ஜெயம் ரவி நடிக்கும் “ஜீனி”.. பூஜையுடன் ஆரம்பம்!

Most Popular