பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்’, அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘நிபுணன்’, மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன் அடுத்து குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்பத்தை தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான யுனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அவரே தயாரிக்கிறார். ‘அன்புக்கோர் பஞ்சமில்லை’ என்ற கருத்தை மையமாகக் கொண்டது இப்படம் என்கிறார் அருண்.
“குழந்தைகளை மையமாக வைத்து வரும் தமிழ்ப் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டைக் காட்சிகள் போன்றவை இடம் பெறும். அப்படி இல்லாமல், குழந்தைகளுக்காக, குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்தப் படம். குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும் விதத்தில் இருக்கும்," என்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாரகள். ஓடிடி தளங்களிலும் கூட குழந்தைகளைக் கவரும் வகையில் படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் கதையை நான் கொரோனாவுக்கு முன்னரே எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்தக் குழந்தையும் இதைத் தொடர்பு படுத்திப் பார்க்க முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்த உள்ளோம்," என்கிறார்.
விரைவில் படத்தின் அறிவிப்பும், நடிகர், நடிகைகளின் அறிவிப்பும் வெளியாக உள்ளது.