டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘Man Vs Wild’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் பியர் கிரில்ஸ் என்னும் சாகச வீரர், அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலகின் முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி எடுப்பார்.
இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் .
பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம் உலகெங்கிலும் பேசப்பட்டது.
இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில் ‘Into the Wild with Bear Grylls’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்திய சினிமாவின் புகழ் பெற்ற நடிகரான ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேகிறார். அவருடனான பேட்டி, கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிர் வாழும் முறைகளை உணர்த்தும் வகையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் . நீர் வளத்தின் பாதுகாப்பை பற்றியும் அவர் பேசியுள்ளார்.
இந்நிகழ்ச்சி பற்றி டிஸ்கவரி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் பியர் கிரில்ஸ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து செய்யும் சாகசங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்,” என்கிறார்.
பியர் கிரில்ஸ் கூறுகையில் “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன்,” என்றார்.