மாலை பொழுதின் மயக்கத்திலே – விமர்சனம்

தயாரிப்பு – ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மா கிரியேஷன்ஸ் – சி.எச்.மயூரி சேகர்

இயக்கம் – நாராயண நாகேந்திர ராவ்

இசை – அச்சு

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்

படத்தொகுப்பு – எம். தியாகராஜன்

நடிப்பு – ஆரி, சுபா, பஞ்சு சுப்பு, பாலாஜி,தேஜஸ்வினி, ஹரி,சேகர், மற்றும் பலர்.

சமீப காலமாக சிறிய திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் பெரிய நட்சத்திரங்கள் நடிக்காத பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் மேலும் பல படங்கள் வர உள்ளன என்பது தினசரி பத்திரிகைகள் பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படி வரும் சிறிய திரைப்படங்களில் ஒரு சில படங்கள் ஏதோ ஒரு விதத்தில் நமது கவனத்தை ஈர்க்க , நாமும் ஒரு ஆர்வத்துடன் அந்த படத்தைச் சென்று பார்த்து விடுவோம். அப்படி ஒரு ஈர்ப்பு இந்த படத்தின் பத்திரிகை விளம்பரங்கள், டிரைலர்கள் மூலம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்துடன் படம் பார்க்கச் சென்றால் நமது ஆர்வத்துக்கு பரிசாக ஒரு சில காட்சிகளும் வசனங்களும் மட்டுமே அமைந்துள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் நாயகன் ஆரியை ஒரு உதவி இயக்குனராகவும், அவர் படம் இயக்குவதற்காக, சினிமாவில் நடிக்கும் ஆர்வமுள்ள ஒருவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆரி படம் இயக்குவதையும் காண்பிக்கும் போது, சரி ஒரு திரைப்பட இயக்குனரின் வாழ்க்கைப் பயணம் போலிருக்கிறது என பார்த்தால் அப்படியே நமது எதிர்பார்ப்பை அடைத்து விட்டு, அந்த திரைப்பட இயக்குனரான ஆரியின் காதல் பயணத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

நாயகனாக நடிப்பவரை ஆரி படப்பிடிப்பில் அடித்து விடுவதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அந்த பணத்தை ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் திருப்பித் தரவேண்டுமென நாயகனாக நடிப்பவர் கெடு விதிக்க, அந்த பணத்தை தரமுடியாமல், வீட்டிலிருந்தால் வம்பு என ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைகிறார் ஆரி. ஒரு மழை பெய்யும் மாலைப் பொழுதில் இது ஆரம்பமாகிறது. அந்த காபி ஷாப்பிற்கு வரும் சுபாவைப் பார்த்ததும், காதல் கொள்கிறார். இருவரும் அப்படியே பேச ஆரம்பிக்க ஆரி,அவருடைய காதலை சொல்கிறார். ஆனால் சுபா, படிப்பதற்காக சிட்னி சொல்வதாகச் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அப்படியே , காதல் கை கூடாத ஏக்கத்தில் ஆரி இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறார். அப்புறம் என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். ஒரு வரியில் எழுதி விடக் கூடிய கதையை இரண்டரை மணி நேரம், அதுவும் ஒரு காபி ஷாப்பிலேயே படத்தை நகர்த்திய இயக்குனரின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.

இந்த மெயின் கதையோடு, காதலித்து கரம் பிடித்து ஒரு ஏழு வயது மகனுடன் இருக்கும் பாலாஜி, தேஜஸ்வனி தம்பதியரின் குடும்பப் பிரச்சனையும் அதே காபிஷாப்பில் நகர்கிறது. தேஜஸ்வினி , உட்கார்ந்த இடத்திலேயே பேச்சிலும், முக பாவத்திலும் , தேர்ந்த நடிகை போல் நடித்து பெயர் வாங்கி விடுகிறார். எதற்கெடுத்தாலும் கோப்படும் இவருடைய கதாபாத்திரம், இன்றைய மேல் தட்டு மனைவியரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. அதுவும் அம்மாவைப் பற்றி அவருடைய மகன் சொல்லும் , அம்மா கோபப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்பது இந்தக் கால குழந்தைகளும் பெற்றோரை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே புரிய வைக்கிறது.

ஆரியும், சுபாவும் இளம் காதல் ஜோடிகள், பேச்சில் மட்டுமே. இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் அழகாக ஸ்கோர் செய்கிறார்கள். சுபாவின் பின்னணி குரலில் திடீரென லைலா தெரிகிறார், வானம் படத்தில் சிம்புவைக் கொஞ்சிப் கொஞ்சி பேசி காதலிக்கும் நாயகி தெரிகிறார். ஆரி, முயன்றால் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரலாம்.

காபி ஷாப்பின் மேனேஜராக பஞ்சு சுப்பு, ஷாப்பிற்கு வந்த கஸ்டமராக சிவாஜி, காபி ஷாப்பில் வேலை பாரப்பவர்களாக ஹரி, சேகர். ஹரி, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சிரிக்க வைக்கிறார், சேகர், உருக வைக்கிறார்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, அழகாய் இருப்பவர்களை மேலும் அழகாய் காட்டியிருக்கிறது. அச்சு வின் இசை பின்னணியில் அதிகமாகவே ஒலிக்கிறது.

டீக்கடைக்குச் செல்பவர்களுக்கு எப்படியோ, காபி ஷாபிற்கு செல்பவர்களுக்குப் பிடிக்கலாம்…

Read Previous

பில்லா 2 – விமர்சனம்

Read Next

மிரட்டல் – விமர்சனம்