தயாரிப்பு – மெஜஸ்டிக் மல்டி மீடியா எழுத்து, இயக்கம் – ஆர். மாதேஷ் இசை – பிரவீண் மணி ஒளிப்பதிவு – டி.கண்ணன் படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷா பாடல்கள் – வாலி,கபிலன், பா.விஜய்,ஆர்.மாதேஷ் நடிப்பு – வினய், ஷர்மிளா, சந்தானம், பிரபு, கஞ்சா கருப்பு, பாண்டியராஜன் மற்றும் பலர்.
ஒரு படத்தைப் பார்க்கும் போது இந்த கதையை ஏற்கெனவே எப்போதோ பார்த்திருக்கிறோமே என்ற உணர்வு ஏற்பட்டாலே , அந்த படத்தை எப்படிப்பட்ட புதுமைகளை வைத்து கொடுத்திருந்தாலும் ஈடுபாட்டுடன் ரசிக்க முடியாமல் போய்விடும். அப்படித்தான் இந்த படத்திலும் இருக்கிறது.
தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரையில் தமிழில் சில, பல வருடங்களுக்கு முன் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் சிலவற்றை அப்படி, இப்படி என மாற்றி ஒரு புது கதையைத் தயார் செய்து ‘ஹிட்’ அடித்தும் விடுவார்கள். நம்மவர்களும் அந்த படத்தைப் பற்றி பெரிதும் ஆராயாமல் அப்படியே ரீமேக் ரைட்ஸ் வாங்கி, தமிழில் ஏதோ ஒரு புது படத்தை எடுப்பது போன்றே எடுத்து வெளியிடுவார்கள். அப்படி, தெலுங்கில் வந்து வெற்றி பெற்ற ‘தீ ’ என்ற படத்தின் ரீமேக் (?) தான் இந்த மிரட்டல்.
இந்த படத்தைப் பார்க்கும் போது 1991ம் ஆண்டு தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சின்னத்தம்பி ’ படத்தின் ஞாபகம் உங்களுக்கும் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. மற்றபடி நாம் சொல்வது சரியா, தவறா என்பதை நீங்கள் சென்று பார்த்து யூகித்துக் கொள்ளுங்கள். சரி, இந்த படத்தின் கதைக்கு வருவோம்.
வட சென்னையையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக கொண்டு ‘சங்கர் தாதா’ வாக வலம் வருபவர் பிரபு. இவருக்கும் மற்றொரு தாதாவான பிரதீப் ராவத்துக்கும் சரியான பகை. பிரதீப் ராவத்தின் மகனை பிரபு கொன்று விடுவதால், இது மேலும் அதிகரிக்கிறது. பதிலுக்கு பிரபு, அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கும் அவர் தங்கை ஷர்மிளாவை கொல்ல ஏற்பாடு செய்கிறார் பிரதீப் ராவத். இந்த திட்டம் தெரிந்து , லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் தன் தங்கை ஷர்மிளாவை , பிரபு, சென்னைக்கே வரவழைத்து விடுகிறார். இந்த சூழ்நிலையில், வேலையின்றி வெட்டித்தனமாக, தில்லுமுல்லு செய்து, சுற்றிக் கொண்டிருக்கும், தன் மகன் வினய்யை, பிரபுவிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார், பாண்டியராஜன். கொஞ்சம் கொஞ்சமாக பிரபுவின் மனதில் இடம் பிடிக்கும் வினய், போகப் போக பிரபுவின் தங்கையான ஷர்மிளா மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். அண்ணன் பிரபுவுக்குத் தெரியாமல், வினய்யை திருமணமும் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்தும் , இதை காட்டிக் கொள்ளாமல் இருவரும் இருக்கிறார்கள், காரணம் பிரபு மீதான பயம். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதுன் படத்தின் மீதி கதை.
ஜெயம்கொண்டான் படத்திற்குப் பிறகு, ஏறக்குறைய நான்கு வருடங்கள் கழித்து இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் வினய். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி சண்டை போட்டாலும், அவரைப் பார்க்கும் போது அந்த ‘லவ்வர் பாய் ’ இமேஜ் இன்னும் மறையவில்லை. அவர் தமிழ் பேசும் உதட்டசைவை கொஞ்சம் கவனித்தால் நலம்.
படத்தின் நாயகியாக புதுமுகம் ஷர்மிளா. ஒரு சில காட்சிகளைத் தவிர , மற்ற காட்சிகள் அனைத்திலும் அழகாகவே தெரிகிறார், நடிக்கவும் செய்திருக்கிறார். அவருக்கான பின்னணி குரலும், வசனங்களுக்கு உச்சரிப்பு கொடுத்த விதமும், இவருக்கு தொடர்ந்து பல படங்கள் கிடைக்க வாழ்த்தலாம், தவறில்லை.
பிரபு வீட்டின் வரவு செலவுகளை பார்க்கும் கணக்காளர் ‘சாரி ’ யாக சந்தானம். காமெடி செய்ய நிறைய வாய்ப்பிருந்தும் , காமெடி கணக்கை சரியாகப் பார்க்காமல் விட்டு விட்டார் சந்தானம். ஏன் எனத் தெரியவில்லை ?
‘சங்கர் தாதா’ வாக பிரபு. உடம்பை மட்டும் கொஞ்சம் இளைக்கச் செய்து விட்டாரென்றால் மீண்டும் ஒரு ‘சின்னத்தம்பி ’ என்ன , பல வெற்றிப் படங்களைப் பார்க்கலாம். முயற்சி செய்யுங்கள் , சார்….
வழக்கமான தாதா வில்லனாக பிரதீப் ராவத், அப்பாவி அப்பாவாக பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், யுவ ராணி, உமா பத்மநாபன் இவர்களும் படத்தில் இருக்கிறார்கள்.
பிரவீன் மணி இன்னும் மணி,மணியான இசையைத் தந்திருக்கலாம்.
இயக்குனர் ஆர்.மாதேஷ் , முடிந்தவரை ஒரு கலகலப்பான ஆக்ஷன் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
‘மிரட்டல் ’ டைட்டிலில் மட்டும்.