தயாரிப்பு – இன் என்டெர்டெயின்மென்ட் இந்தியா லிமிடெட்
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் லிமிடெட்
இயக்கம் – சக்ரி டோலெட்டி
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்
வசனம் – இரா முருகன், முகம்மது ஜாபர்
பாடல்கள் – நா.முத்துக்குமார்
நடிப்பு – அஜித்குமார்,பார்வதி ஓமனகுட்டன், புருணா அப்துல்லா, சுதன்ஷு பான்டே, வித்யுத் ஜம்வால் மற்றும் பலர்.
இன்றைய தேதியில் அஜித் போன்ற ஒரு மிகப் பெரிய மாஸ் ஓபனிங் உள்ள ஒரு ஹீரோ கிடைத்தால் ஒரு இயக்குனர் என்ன செய்வார், அருமையான கதையை தேர்ந்தெடுத்து, அட்டகாசமான திரைக்கதை அமைத்து , திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தை அள்ளிக் கொள்வார். இப்படியெல்லாம் இயக்குனர் சக்ரி டோலெட்டி செய்திருக்கிறாரா என்றால், அது ஒரு கேள்விக்குறிதான். ஒரு படத்தின் ஹீரோ ஒரு கேங்ஸ்டராக வர, ஆசைப்படுகிறார் என்றால், அவர் அப்படி மாறத் துடிப்பதற்கான மிகப் பெரிய ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். குடும்பத்தாரை இழந்திருக்க வேண்டும், அல்லது நண்பர்களை இழந்திருக்க வேண்டும், அல்லது காதலியை இழந்திருக்க வேண்டும், இப்படி ஏதோ ஒன்று காரணமாக அமைய வேண்டும்.
இந்த படத்தைப் பொறுத்த வரையில் அகதியாக இந்தியவிற்குள் வரும் அஜித், ஏன் கேங்ஸ்டராக மாறுகிறர் என்பதற்கு அழுத்தமான காரணம் எதுவுமில்லை. திடீர் திடீரென வெளிநாட்டிற்கு பயணிக்கும் காட்சிகளும், எடுத்ததுக்கெல்லாம் கத்தியாலோ , துப்பாக்கியாலோ சுட்டுக் கொண்டேயிருப்பது சரிதானா என கேள்வியை எழுப்பி விடுகிறது.
சரி, கதைக்கு வருவோம். இந்தியாவிற்குள் அகதியாக வருகிறார் அஜித். வந்து சேரும் அகதி முகாமிலேயே அவருடைய கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார். அதனால் அகதி முகாமின் பாதுகாப்பு அதிகாரியை பகைத்துக் கொள்கிறார். அந்த அதிகாரி அஜித்தை பெரிய சிக்கலில் மாட்டி விட முயற்சிக்க அஜித், அதிலிருந்து தப்பி, அந்த சிக்கலையே அவருடைய வளர்ச்சிக்கு அச்சாரமாக அமைத்துக் கொள்கிறார். கடத்தல் வேலைகளை செய்யும் இளவரசுவிற்கு துணையாக இருந்து படிப்படியாக உயர்ந்து கோவாவில் இருக்கும் கடத்தல் மன்னனான சுதன்ஷு பான்டே கும்பலில் சேர்ந்து விடுகிறார். அவருடன் இருந்து சர்வதேச கடத்தல் வேலைகளை செய்யும் வித்யுத் ஜம்வாலுடன் ஆயுதக் கடத்தல் தொழிலில் ஈடுபட முயற்சிக்கிறார். இது பிடிக்காத சுதன்ஷு பான்டே அஜித்தையே கொலை செய்ய முயல்கிறார். ஆனால் அஜித், சுதன்ஷுவை கொன்று விட்டு, அவர் செய்த வேலைகளை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். சுதன்ஷுவுடன் வலது கையாக இருந்து வந்த மனோஜ் கே.ஜெயன், சர்வேதச கடத்தல் காரரான வித்யுத்துடன் கூட்டு சேர்ந்து அஜித்தை அழிக்கத் துடிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
டேவிட் பில்லாவாக அஜித். வழக்கம் போல அவருடைய ஸ்டைலிஷான நடிப்பால் திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அவருடைய பேச்சும், நடிப்பும் வழக்கம் போலவே அட்டகாசம்தான். ஆனால் அனைத்துமே ஏதோ வந்து போவது போலவே ஒரு உணர்வு. எடுத்ததுக்கெல்லாம் சுட்டுக் கொண்டேயிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை வரவழைத்து விடுகிறது. அஜித், இப்படி கேங்ஸ்டராக மாறுவதற்கு சரியான காரணத்தை வைத்திருந்தால் இதெல்லாமும் நமக்கும் பிடித்திருக்கும் போல.
அஜித்துக்கு ஜோடி வேண்டுமென்பதற்காக பார்வதி ஓமனகுட்டன். நடிக்க அதிக வாய்ப்பில்லை. இந்திய அழகிப் பட்டம் வென்றவர், ஆனால் திரையில் மிகவும் சாதாரணமாகத்தான் தெரிகிறார்.
ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் இருக்க வேண்டும் என்ற வழக்கத்திற்கு புரூணா அப்துல்லா.
சுதன்ஷு பான்டே, வித்யுத் ஜம்வால், தினேஷ் லம்பா, மனோஜ் கே. ஜெயன், இளவரசு என நீ…….ண்ட நட்சத்திரப்பட்டியல்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை அமர்க்களம். மதுரை பொன்னு பாடல் மட்டுமே முழுமையாக வருகிறது.
ஆரம்பத்தில் மட்டுமே நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். போகப் போக நம்மையே துப்பாக்கியால் கொன்று விடுவார்களோ என பயப்படும் அளவிற்கு நூற்றுக்கணக்கான கொலைகள்..
இன்னும் பெயரிப்படாத அஜித்தின் அடுத்த படமாவது அஜித்தின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்யட்டும்.