தயாரிப்பு – பிரைட் மீடியா வாரியர்ஸ் ஏ. நாகராஜன்
இயக்கம் – K.I. ரஞ்சித்
இசை – E.S. ராம்ராஜ்
ஒளிப்பதிவு – ஏ. ஜெயப்பிரகாஷ்
படத்தொகுப்பு – எல்.வி. தாசன்
வசனம் – எழுச்சூர் அரவிந்தன்
நடனம் – தினா
சண்டைப் பயிற்சி – ஆக்ஷன் பிரகாஷ்
கலை – டி.என். கபிலன்
பாடல்கள் – விவேகா, சினேகன்
மக்கள் தொடர்பு – நிகில்
நடிப்பு – அஷோக், ஸ்ரீஜா ரோஸ், ‘ஆடுகளம்’ நரேன், ரோகிணி, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோதி லட்சுமி, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, சிங்கமுத்து மற்றும் பலர்
வெளியான தேதி – டிசம்பர் 28, 2012
வசதியான பெண்ணை ஏழை வீட்டுப் பையன் காதலிக்கும் ‘தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை’.
கிராமத்துக் காதல் என்றாலே ஒரு இனிமை இருக்கும், ஒரு சுவாரசியம் இருக்கும். அப்படி எதையும் இந்த படத்தில் வைக்காமலே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஆனால், எல்லோரிடமும் அதிகப்படியான ‘நடிப்பை’ வாங்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அஷோக் , ஒரு வாரத்தில் இறந்து விட இருக்கும் கோழிக் குஞ்சுகளை வாங்கி ஏமாற்றி விற்பவர். அப்படி ஒரு நாள், நாயகி சிஜா ரோஸிடம் விற்ற கோழிக் குஞ்சுகளால் இருவருக்கும் பிரச்சனை வர, வழக்கம் போல இருவருக்கும் காதல் வந்து விடுகிறது. இந்த காதலுக்கு ஜாதி அந்தஸ்து பார்க்கும் சிஜாவின் சித்தப்பா போஸ் வெங்கட் எதிராக இருக்க, மகன் அஷோக்கின் காதல் பற்றி பின்னர் தெரிந்து கொள்ளும் அம்மா ரோகிணியும் எதிராக இருக்க, காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
கோழிக் குஞ்சு விற்பவராக, தன்னை தோற்றத்தில் நன்றாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார் அஷோக். குரலும், மாடுலேஷனும் அவருக்கு நன்றாகவே ஒத்துழைத்திருக்கிறது. பல காட்சிகளில் நடிப்பைக் கொஞ்சம் அதிகப்படியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
பெரிய வீட்டுப் பெண்ணாக ஸ்ரீஜா ரோஸ். கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் சென்று படிக்கும் பெண் கதாபாத்திரம். அஷோக்கை விடாப்பிடியாகக் காதலிக்கும் கதாபாத்திரம். சமீபத்தில் பார்த்த, ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் நாயகியின் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. இருந்தாலும், அழகிய கண்களால் வசீகரப்படுத்தி விடுகிறார்.
ஊர் பெரிய மனிதராக ‘ஆடுகளம்’ நரேன், காதலை எதிர்க்கும் போஸ் வெங்கட், ரோகிணி இவர்களும் நிறைவான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
ராம்ராஜ் இசையில், வாடாமல்லிக்காரி….,சாரை பாம்பை போல…பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
கோழி கூவுது – சத்தம் அதிகம்தான்…
