மேடையில் பேசுவது ஒரு கலை, ஆனால், சிலரோ மைக் கிடைத்தால் போதும் எதை வேண்டுமானால் பேசி விடுவார்கள்.
யாரையோ தூக்கி வைத்து பேசுவதற்குப் பதிலாக மற்றவரை மட்டம் தட்டி விடுவார்கள்.
இப்படித்தான் இன்று காலை ‘நிமிர்ந்து நில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது.
யு டிவி நிறுவனத்தின் செயல்தலைவரான தனஞ்செயன் விழா மேடையில் ஜெயம் ரவியை வாழ்த்துவதாக நினைத்து இயக்குனர் அமீரை வம்புக்கிழுத்து மாட்டிக் கொண்டார்.
தனஞ்செயன் பேசும் போது “2014ம் ஆண்டு ஜெயம் ரவியின் ஆண்டாக இருக்கும். ‘நிமிர்ந்து நில், பூலோகம், ஜெயம் ராஜா இயக்கும் படம் என அடுத்தடுத்து அவரது படங்கள் வெளிவர இருக்கின்றன.
மூன்று ஆண்டுகளாக ஒரே படத்தில் நடித்தார், அடுத்த ஆண்டு அவர் நடித்து மூன்று படங்கள் வெளிவர உள்ளது. அப்படியே எங்களது நிறுவனத்திற்கும் கால்ஷீட் தர வேண்டும்” என மேடையிலேயே அவரது வேண்டுகோளையும் வைத்தார்.
தனஞ்செயன் அவரது பேச்சில் மூன்று ஆண்டுகளாக ஒரே படத்தில் நடித்தார் என குறிப்பிட்டது அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘ஆதி பகவன்’ படத்தைப் பற்றித்தான்.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் இயக்குனர் அமீர் பேசும் போது, “என்னுடைய நாயகன் ஜெயம் ரவி, நான் இதுவரை யாரையும் என்னுடைய நாயகன் என சொன்னதில்லை. ஆனால், ஜெயம் ரவி என் படத்தில் நடிக்கும் போது முதல் நாள் எப்படி இருந்தாரரோ, அதே போல் கடைசி நாள் ஷுட்டிங்க வரை அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார்.
இங்கே நான் இருப்பது தெரியாமல் என்னுடைய படத்தைப் பற்றி தனஞ்செயன் பேசினார். கவலைப்படாதீர்கள் ரவி, நான் கண்டிப்பாக உங்களைக் கூப்பிட மாட்டேன், ” என இயக்குனர் அமீர் பேசினார்.
வெற்றியும் தோல்வியும் ஒரு கலைஞனனுக்கு பெரிய விஷயமல்ல…மேடையில் அத்தனை பேர் முன் திறமை மிக்க இயக்குனரைப் பற்றி எப்படி பேசுவது என்பது இன்னும் சிலருக்குப் புரியாமலே உள்ளது….