ஜனவரி 10ம் தேதி வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக நன்றாக ஓடிக் கொண்டு வருவதாக வினியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.
‘ஜில்லா’ படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை ‘ஜில்லா’ படக் குழுவினர் விஜய், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் இமான், சூரி, மகத், மற்றும் இப்படத்தை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வெளிநாடுகளில் வெளியிட்ட வினியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய்,
“என்னோட ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னோட நண்பர்கள் எல்லாம் பல திரையரங்குகளுக்குப் போனாங்க. அவங்க காட்டின வீடியோ காட்சிகள்லாம் பார்த்து மனசுக்கு ரொம்ப ‘டச்சிங்கா’ இருந்தது.
விடியற்காலைல பனியிலயும், குளிருலயும் ரசிகர்கள் போய் படம் பார்த்து இந்த படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கொடுத்தற்கு ரொம்ப நன்றி. இதுக்கு எல்லாமே காரணம் அவங்கதான். அவங்களுக்கு நன்றி சொல்லத்தான் நான் இந்த சந்திப்பை பயன்படுத்திக்கறன்.
இந்த படம் வெற்றிப் படமா அமைய காரணமா இருந்த படத்தோட குழுவினருக்கும் நன்றி. சௌத்ரி சாரோட நான் நடிச்ச இந்த ஆறாவது படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கு.
பொங்கலுக்கு ரிலீசான ‘வீரம்’ படமும் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். அஜித்துக்கும், படத்தோட இயக்குனர் சிவா மற்றும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயம் ரொம்ப ஹெல்த்தியா இருக்கு. ஒரு சமயத்துல ஒரு படம்தான் இப்படி பெரிய அளவுக்கு ரிலீஸ் பண்ண முடியும்னு சொன்னாங்க. ஆனால், இரண்டு படமுமே நல்ல வெற்றியைப் பெற்றிருக்கு.
அனைவருக்கும் நன்றி, என்றார் விஜய்.