ஃபெப்ஸி உறுப்பினர்கள் செய்தது மாபெரும் தவறு – தலைவர் அமீர்

fefsi issue

தமிழ் சினிமாவில் எப்போதுமே பிரச்சனைக்குரியதாகவே இருக்கும் ஒரு சங்கம், ஃபெப்ஸி என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம். இதன் தலைவராக இயக்குனர் அமீர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர்களது அத்துமீறல்களும், அடாவடித்தனங்களும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது முன்பை விட அதிகமாகத்தான் ஆகியிருக்கிறதே தவிர குறையவில்லை.

சில நாட்களுக்கு முன்னர்தான் சிறு பட தயாரிப்பாளரான ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தை இயக்கி வரும் கஸாலி, ஃபெப்ஸி தொழிலாளர்களின் அத்து மீறலால் அவர் பாதிக்கப்பட்டது குறித்து பத்திரிகைகளுக்கு செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அடுத்த சில நாட்களுக்குள், நேற்று ‘ஆதியும் அந்தமும்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் பிரசாத் லேப்பில் புகுந்து அங்கிருந்த பத்திரிகையாளர்களையும் தாக்க முற்பட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டவும் செய்தனர். இதனால், அங்கு கடுமையான மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்ட நிலையில், சில மூத்த பத்திரிகையாளர்கள் தலையிட்டு பிரச்சனையை அப்போதைக்கு தவிர்த்தனர்.

இதைப் பற்றி ஃபெப்ஸி தலைவர் அமீருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் நேற்று இரவுதான் பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டார். ஃபெப்ஸி உறுப்பினர்கள் அது போன்ற செயலில் ஈடுபட்டது தவறு என்றார். மேலும், பிரச்சனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாளை அவர்களை பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வைப்பதாகம் தெரிவித்தார்.

நேற்று மாலை ‘ஜமாய்’ படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா ஆகியோரிடமும் பத்திரிகையாளர்கள் காலையில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றிக் கூறினர்.

அவர்களும் ஃபெப்ஸி உறுப்பினர்கள் அப்படிப்பட்ட அராஜக செயலில் ஈடுபட்டது தவறு, ஃபெப்ஸி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இதற்கு ஒரு நிரந்தர முடிவு ஏற்படுத்துகிறோம் என்றும் சொன்னார்கள்.

ஒரு திரைப்படத்தின் பூஜை போடப்பட்ட நாளிலிருந்து, இறுதிக்கட்டப் பணி வரை மட்டுமே ஃபெப்ஸியின் உறுப்பினர்களைப் பயன்படுத்த வேண்டும்.

இசை விழாவிலே, பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளிலோ அவர்களைப் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் அவர்கள் தெளிவாகக் கூறினர்.

அப்படியிருக்க நேற்று காலை நடைபெற்ற செயல் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவே தெரிகிறது.

இது தொடர்பாக திரைப்பட பத்திரிகையாளர்கள் அனைவருமே கடும் கோபத்தில் உள்ளனர்.

உடனடியாக இப்பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வு காண வேண்டும்.

Read Previous

விஜயகாந்த் நடிக்காதது இழப்பு – வருத்தப்படும் இயக்குனர்

Read Next

இயக்குனர் பாலு மகேந்திரா மறைவு…

Most Popular