விஜயகாந்த் நடிக்காதது திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான் என்று ஒருபுதுமுக இயக்குநர் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு,
எண்டர்டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட் சார்பில் சன்ஜய் டாங்கி தயாரித்துள்ள படம் ‘மறுமுகம்‘. கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.
படத்தின் இயக்குநர் கமல் சுப்ரமணியம் பேசும்போது “இந்தப் படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாகச் சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம்.
எங்கள் நண்பன் திரைப்படக் கல்லூரியின் சீனியர் மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ப்ரித்தி தாஸ், அனு, ஷில்பி, ரிஷி ஆகியோரும் நடித்துள்ளனர். ப்ரீத்தி உள்பட பலருக்கும் இது முதல் படம் . ஆனால் அனுபவசாலி போல அசத்தியுள்ளார்கள்.
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம்தான். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் எல்லாரது முதல் கனவும் அதுவாகவே இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் அவர்கள் செல்லும் இடம் ராஜாபாதர் தெருவாகத்தான் இருக்கும்.
அவர் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர். அப்போது நான் தயாராக இல்லை. நான் இயக்கத் தயாராக இருந்த போது அவர் அரசியல் என்ற வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் இப்போது நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்.
‘மறுமுகம்‘ என்பது என்ன என்கிறார்கள். எல்லாரிடமும் பல முகங்கள் உண்டு. சூழலுக்கு ஏற்றபடி அரவரது நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும் ஒருவனது மறுமுகம் தான் இப்படம்,” என்றார் இயக்குனர்.
