இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்

ஒரு இயக்குனருக்கோ, ஒரு நாயகனுக்கோ இரண்டாவது படம்தான் அவர்களது தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு படமாக அமையும். அவர்களுக்கான இடத்தையும் உறுதிப்படுத்தும்.

அந்த விதத்தில் ‘சுந்தரபாண்டியன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த நாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த படம் எப்படிப்பட்ட கமர்ஷியல் வெற்றியைக் கொடுக்கப் போகிறது என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

ஆனாலும், இருவருமே அவர்களது முதல் படத்தோடு ஒப்பிடும் போது இந்த படத்தில் அரை கிணறுதான் தாண்டியுள்ளார்கள்.

ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி காதலிக்கும் ஒரு இளைஞனின் கதைதான் இந்த படமும். கூடவே, கொஞ்சம் ஃபேமிலி சென்டிமென்ட், அதிகமான நகைச்சுவை என கமர்ஷியல் முலாமை பூசியிருக்கிறார்கள்.

மினி பேருந்துகளின் ஓனரான உதயநிதி ஸ்டாலின் , காதல் திருமணம் புரிந்து கணவருடன் சண்டை போட்டு விட்டு வந்த அக்கா சாயா சிங்கை அவரது கணவருடன் சேர்த்து வைக்க அவரது ஊரான மதுரையிலிருந்து, அக்கா வீடிருக்கும் கோயம்புத்தூருக்குச் செல்கிறார். அங்கு அக்கா கணவருக்கு ஆகாத குடும்பத்து வீட்டுப் பெண்ணான நயன்தாராவைக் காதலிக்கிறார்.

இது தெரிந்ததும் உதயநிதியை வீட்டை விட்டு அனுப்புகிறார் மாமா. தன் மகன் தன்னிடம் பொய் சொல்லிவிட்டு சென்றதால் உதயநிதியை வீட்டுக்குள் விடக் கூடாதென அவருடைய அப்பாவும் சொல்லிவிடுகிறார். இதனால், நண்பன் சந்தானத்திடம் அடைக்கலமாகிறார் உதய்.

அதன் பின் எப்படி அவர் நயன்தாராவைக் கைபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

எந்த வித நெளிவு, சுளிவு இல்லாமல் தெளிந்த நீரோடையாக ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. எந்தவிதமான ட்விஸ்ட்டோ, டேர்னோ இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறை.

வில்லனாவது ஏதாவது செய்வார் என்று நாமும் வழக்கம் போல் எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே. சரி, அப்பாவாவது மகனை எதிர்ப்பார் என்று பார்த்தால் அவரும் ஒரு கட்டத்தில் பாசத்தில் விழுந்து விடுகிறார். சரி, நயன்தாராவின் அப்பா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று பார்த்தால், அவரும் காதலுக்கு எதிரி இல்லை என்கிறார். இப்படி எல்லாரையுமே அநியாயத்திற்கு நல்லவராக காட்டினால் என்ன செய்வது.

உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது படத்தில் நிறைய முன்னேறியிருக்கிறார். குறிப்பாக நடனத்தல் அசத்துகிறார். நடிப்பிலும் முன்னேற்றமே. இருந்தாலும் சந்தானத்தை விட்டு எக்ஸ்பிரஷன் பற்றி ஒரு கமென்ட் அடிக்க வைத்து சமாளிக்காமலே இருந்திருக்கலாம். டயலாக் டெலிவரி மட்டும் ஒரே மாதிரி இருக்கிறது, கொஞ்சம் மாற்றிப் பேசலாம். இரண்டு படமாக ஹீரோயின்ஸை துரத்தறதே உங்க வேலையாப் போச்சி. அடுத்த படத்துலயாவது, ஹீரோயினை உங்க பின்னாடி சுத்த வையுங்க. ‘காக்ரோச் தியரி’லாம் இந்த படத்தோட போதுமே…

நயன்தாரா அழகா இருக்கிறார்னு ஆயிரம் முறையாவது சொல்லியாச்சி. இந்த படத்துல பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவுல இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகோட இருக்கிறாரு. மருந்துக்குக் கூட கிளாமர் இல்லை. ஒரு பாடல் காட்சியில தாவணிக்குக் கூட பல இடங்கள்ல ‘பின்’ குத்தியிருக்காங்க…இது நம்ம பக்கத்து சீட்டுல இருக்கிறவரு அடிச்ச கமென்ட். நயன்தாரா ஜஸ்ட் வந்து போற மாதிரி தோணுது. இன்னும் அழுத்தமா ஒண்ணு, ரெண்டு சீன் வச்சிருக்கலாம்.

படத்துக்கு ‘சத்து’ சேர்த்திருக்கிறவரு சந்தானம். நல்ல வேளை இந்த படத்துல ஒரு டபுள் மீனிங் டயலாக் கூட இல்லை. ஆனாலும், காதலைப் பத்தியும், காதலிக்கிறதப் பத்தியும் இன்னும் எவ்வளவு டயலாக் ஸ்டாக் வச்சிருக்காருன்னு தெரியலை. சரளமா எடுத்து விடறாரு. ஒவ்வொரு டயலாக்குக்கும் தியேட்டர்ல கைதட்டல் காதைப் பிளக்குது.

சாயா சிங், நரேன், சரண்யா, ஜெயப்பிரகாஷ், வனிதா, பரத், சுந்தர், முருகதாஸ் அவங்கவங்க கதாபாத்திரத்துல சரியா நடிச்சிருக்காங்க.

அக்கா சாயாசிங்கையும், மாமா பரத்தையும் சேர்த்து வைக்கிறதுக்காக உதயநிதி பண்ற மிஸ்டு கால் ஐடியா சிம்ப்ளி சூப்பர்ப்.

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையில் ஆங்காங்கே ‘ஓகே ஓகே’ ஒலிக்கிறது. “விழியே விழியே….’, ‘சரசர…’, ‘மேலே மேல…’ எப்எம்களிலும், சேனல்களிலும் ஒலி,ஒளிக்கும்.

பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு ‘பளிச்’ என இருக்கிறது. ஒருத்தர் விடாம எல்லாரையுமே அழகா காட்டியிருக்கிறாரு. அதிலும் சாலையில் இடம் பெறும் காட்சிகள் எல்லாம் பச்சைப் பசேலென இருக்கிறது.

 

Read Previous

பாலுமகேந்திரா உடலை பார்க்க அனுமதிக்கவில்லை – மௌனிகா

Read Next

தடுத்தவர்கள் பற்றி பேச வேண்டாம் – மௌனிகா