மறுமுனை – விமர்சனம்

marumunai review

கடந்த சில வருடங்களாக பல புதுமுக நடிகர்களும், நடிகைகளும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் திரையுலகில் நுழைந்த பின் திரைப்படம் எடுப்பது கொஞ்சம் எளிதான விஷயமாகி விட்டது. ஒரு சில திரைப்படங்கள் நல்ல கதையம்சத்துடனும், வித்தியாசமான கதைக்களத்துடனும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, வெளி வந்து வெற்றி பெற்றதால் அதே போல் பல படங்கள் வர ஆரம்பித்தன.

அவற்றுள் சில படங்கள் மட்டுமே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சினிமாவின் ஒரு முனை பணத்தை கொட்டக் கூடியதாக இருந்தாலும், ‘மறுமுனை’ கூரான கத்தி போன்றுதான் இருக்கிறது. யாரை எப்போது பதம் பார்க்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால், இதுவரை நாம் சொன்னதற்கும் இந்த ‘மறுமுனை’ படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அறிமுக ஹீரோவை வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்து, திரைக்குக் கொண்டு வருவதே பெரிய வெற்றிதான். இந்த படத்தில் கூடவே ஒரு படிப்பினையுடன் கூடிய கதையை வைத்து படமாகக் கொடுத்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

படத்தின் நாயகன் மாருதி, டாக்டருக்குப் படிப்பவர், எளிமையான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய அப்பா ஒரு பேருந்தின் நடத்துனர். மாருதிக்கும் , அதே ஊரைச் சேர்ந்த பெரிய மனிதர் சேரன் ராஜின் மகளான மிருதுளாவுக்கும் காதல். வழக்கம் போலவே, மாருதி – மிருதுளா காதலுக்கு அந்தஸ்து, கௌரவம் இடைஞ்சலாக இருக்கிறது. மிருதுளாவின் அப்பா சேரன் ராஜ், காதலர்களைப் பிரிக்கிறார்.

ஆனால், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என நினைப்பவர்களுக்கு சில காமக் கொடூரன்களால் வேறு ஒரு ரூபத்தில் பிரச்சனை வர காதலர்களின் கதி என்ன என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பமே, கிளைமாக்ஸ் போல் யோசித்த இயக்குனரைப் பாராட்ட வேண்டும். மாருதி, மிருதுளா இருவரும் மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொல்ல முயல, மிருதுளா மட்டும் குதிக்க, மாருதி ஏதோ ஒரு வேகத்துடன் திரும்ப…ஆரம்பமே அட்டகாசம்தான்.

ஒரு சிலரை மாருதி எதற்காக கொல்கிறார், டாக்டருக்குப் படிப்பவரிடம் ஏன் இந்த கொலை வெறி ? என்பதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்கின்றன.

புதுமுகம் மாருதி, உயரத்தில்தான் கொஞ்சம்  குறையாகத் தெரிகிறார், ஆனால் நடிப்பில் முதல் படம் என்று சொல்ல முடியாத நடிப்பு. காதலியை இழந்த வலியையும், ஒவ்வொருவரையும் பழி வாங்கத் துடிக்கும் வேகமும் இயல்பாகவே வெளிப்பட்டுள்ளது. நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால், இளம் ஹீரோக்களின் வரிசையில் இடம் பெறலாம்.

‘வல்லினம்’ படத்தில் வந்து போன மிருதுளாவுக்கு இந்த படத்தில் கதறல், பதறல் என காட்சிக்குக் காட்சி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஒரு பக்கம் அப்பாவின் மிரட்டல், மறு பக்கம் காதலன் மீதான அன்பு என , வழக்கமாக காதல் கொடுக்கும் தைரியம் இவரிடத்திலும் தெரிகிறது. ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி…’ஆக இருக்கிறார். கொஞ்சம் குண்டான தப்பேயில்லை.

மகள் காதலிப்பதை எதிர்க்கும் வழக்கமான அப்பாவாக சேரன் ராஜ், நடுத்தரக் குடும்பத்துக்கே உரிய பரிதாபமான அப்பா எம்.எஸ்.பாஸ்கர், பெண்கள் மீது மோகம் கொண்டு அலையும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராஜசிம்மன் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

பாடல்களுக்கு சத்யதேவ் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை – தாஜ்நூர். சிம்பு, சின்மயி, கானா பாலா என பிரபல பாடகர்களைப் பாட வைத்து பாடல்களை கவனிக்க வைக்கிறார்கள்.

‘மேக்கிங்’கில் வேறு மாதிரியான தோற்றத்தை காட்டியிருக்கலாம். அது ஏதோ ஒரு சாதாரண படத்தைப்  பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. ‘த்ரில்லர்’ படத்துக்குரிய காட்சியமைப்பும், லைட்டிங்கும் இல்லாமல் இருக்கிறது.

காதலர்களை குறை சொல்வதா, இல்லை சமுதாயத்தை குறை சொல்வதா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது. இருந்தாலும் கிளைமாக்ஸ் அழுத்தத்துடனும், கொஞ்சம் சோகத்துடனும் முடிகிறது.

மறுமுனை – ‘கூர்’ கொஞ்சம் குறைவு…

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

Read Next

ஒரு ஊர்ல – விமர்சனம்

Most Popular