ஒரு ஊர்ல – விமர்சனம்

oru oorla review

கெட்டவனாக இருக்கும் ஒருவன் நல்லவனாக மாறும் கதை. தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கருவைக் கொண்ட பல கதைகளைப் பார்த்திருக்கிறோம்.

பொதுவாக கெட்டவனாக இருக்கும் நாயகனை, காதலியாக வரும் நாயகி திருத்தி நல்வழிப்படுத்துவாள். இதுதான் பெரும்பாலான படங்களில் இடம் பெறும். ஆனால், இந்த படத்தில் அந்த நாயகனை ஒரு சிறு குழந்தையின் பாசம் திருத்துகிறது.

இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என கொஞ்சம் ஆபாசமும், காதல் என்ற பெயரில் எதை எதையோ காட்டுவதும் என வந்து கொண்டிருக்கும் சில படங்களுக்கு நடுவே கே.எஸ்.வசந்தகுமார் இயக்கியுள்ள இந்த படம் ‘அத்திப் பூ’தான்.

வெங்கடேஷ் பழைய தேவையற்ற பொருட்களை விற்கும் ‘காயலான் கடை’யில் வேலை பார்க்கிறார். வேலை பார்க்கும் நேரம் போக எப்போதும் குடித்துக் கொண்டேயிருக்கும் ஒரு குடிகாரர். இறந்து போன அம்மா மீது அதிக பாசம் வைத்துள்ளவர். இவருடைய அண்ணனுக்கு பிறக்கும் குழந்தை, அவரது அம்மா போலவே இருப்பதால் அந்த குழந்தையைப் பார்த்த நொடி முதல், அதிகமான பாசம் கொள்கிறார்.

அண்ணன் குழந்தையாக இருந்தாலும், அந்த சித்தப்பா பாசம் ஆளையே மாற்றி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நல்லவனாக மாறி விடுகிறார். இதனிடையே இவருடைய அண்ணனான இந்திரஜித், ஒரு பெண்ணை சின்ன வீடாக வைத்திருப்பதால் பெரும் பிரச்சனை வருகிறது. அந்த பெண்ணை ஊரை விட்டு துரத்த அண்ணன் முயற்சிக்கிறார். ஆனால், அந்த பெண்ணோ, குழந்தையை கடத்தி விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

‘இப்படியும் ஒருத்தன் உண்டு’ என்ற ஒரே பாடலில் நாயகன் வெங்கடேஷின் கதாபாத்திரம் எப்படி என்பதை உணர்த்தி விடுகிறார்கள் இளையராஜாவும் இயக்குனரும். அச்சு அசலாக ஒரு கிராமத்து இளைஞனை, மகா குடிகாரனை கண்முன் நிறுத்துகிறார் வெங்கடேஷ். நிஜமாவே குடிச்சிட்டுதான் நடிச்சாரான்னு கேக்கற அளவுக்கு இருக்கு அவரோட நடிப்பு. கொஞ்சம் கொஞ்சமாக அவர் அண்ணன் குழந்தையின் பாசத்துக்கு அடிமையாவதும், அந்த குழந்தைக்காக எதையும் செய்யத் துணிவதும் பாசத்தின் பரவசம். குழந்தைக்காக கிளைமாக்ஸ் காட்சியில் அவர் எடுக்கும் முடிவை மட்டும் நம்ப முடியவில்லை.

படத்தின் நாயகி என பெயருக்கு, ஹீரோவைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நேகா பட்டீல் நடித்திருந்தாலும், சிறுமியாக நடித்துள்ள பேபி செளந்தர்யாதான் படத்தின் நாயகி.  இந்த சின்ன வயசுல இப்படி ஒரு யதார்த்தமான நடிப்பா என ஆச்சரியப்பட வைக்கிறார். பணக்காரச் சிறுமி கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்து ஆச்சரியப்படும் சிலருக்கு, இந்த சாதாரண கிராமத்துச் சிறுமி வேடத்தில் நடித்துள்ள சிறுமியின் நடிப்பை புகழ மனமே வராது.

அப்பா, அம்மாவை விட சித்தப்பா மீது அதிக பாசம் வைத்துள்ள சிறுமியின் கதாபாத்திரமும், அதில் பேசி சௌந்தர்யாவின் நடிப்பும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் கூட சினிமாத்தனமில்லாத நிஜமான கிராமத்து மனிதர்களாகவே தெரிகிறார்கள்.

இளையராஜாவின் இசையில் “தாயே வந்தாயே….” இன்னுமொரு தாய்ப் பாசத்தின் உச்சம்…கேட்டாலே கண்ணீரை வரவைக்கும். உயிரோட்டமான பல காட்சிகளை வழக்கம் போல தனது இசையால் மேலும் உயிரூட்டியிருக்கிறார். ‘ஒரு ஊர்ல’  ஒரே ஒரு ராஜா…

இப்படிப்பட்ட பாசமான, கிராமத்து மனிதர்களின் பாசத்தை வெளிப்படுத்தக் கூடிய படங்கள் சமீப காலங்களில் வந்ததில்லை. 10 வருடங்களுக்கு முன்னால் வந்திருந்தால் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கக் கூடிய படம், தற்போதைய சூழலில் வந்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

இப்படிப்பட்ட சின்ன படங்களையும் ரசிகர்கள் ரசித்து ஆதரவு தர வேண்டும் என்பதே நமது ஆவல்.

ஒரு ஊர்ல – உன்னதம்…

 

Read Previous

மறுமுனை – விமர்சனம்

Read Next

நெடுஞ்சாலை – விமர்சனம்

Most Popular