புதிய கதைக்களத்துடன், இது வரை தமிழ் சினிமாவில் அவ்வளவாக பயணிக்காத ஒரு பாதையில் இந்த ‘நெடுஞ்சாலை’யில் பயணித்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.
படத்துக்குப் படம் வித்தியாசமாகவும், இதுவரை யாரும் சொல்லாத கதையை சொன்னால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைதான் தற்போது சினிமாவில் இருந்து வருகிறது.
இந்த படத்தைப் பொறுத்தவரையில் கதைக்களமும், அதற்கான பின்னணியும் மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளது. நடித்துள்ளவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்துள்ளார்கள். ஆனால், சில காட்சிகள் வழக்கமான சினிமாத்தனத்துடன் இருப்பதை முழுமையாக தவிர்த்திருக்கலாம்.
ஆரி பெற்றோர் இறந்து போன ஒரு கார் விபத்தில் பிறக்கிறார். அவரை வயதான ஒருவர் எடுத்து வளர்க்கிறார். சிறு வயது முதலே மிகவும் துடிப்பாக இருக்கும் ஆரியை சூழ்ச்சி மூலம் திருடனாக மாற்றுகிறார் கண்ணன் பொன்னையா. அதன் பின் இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து நெடுஞ்சாலையில் வரும் லாரிகளில் இருந்து பொருட்களைத் திருடி அதை சலீம் குமாரிடம் கொடுக்கிறார்கள். ஆரியின் கதாபாத்திரப் பெயரான ‘தார்ப்பாய் முருகன்’ என்றாலே அந்த பகுதியில் வரும் லாரிக்காரர்கள் மிகவும் பயப்படுகிறார்கள்.
அந்த பகுதிக்கு இன்ஸ்பெக்டராக வரும் பிரசாந்த் நாராயணனுக்கும், ஆரிக்கும் இடையே மோதல் ஆரம்பமாகிறது. அதற்குக் காரணம் நெடுஞ்சாலையில் ‘தாபா’ வைத்து நடத்தும் ஷிவதா. பிரசாந்த் நாராயணன், ஷிவதாவை அடையத் துடிக்கிறார். ஒரு கட்டத்தில் ஆரி, ஷிவதா இருவரும் காதல் கொள்கிறார்கள். காதல், ஆரியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது. இதனால் வருமானம் பாதிக்கப்படும சலீம் குமார் ஒரு பக்கம் சூழ்ச்சி செய்ய, இன்ஸ்பெக்டரான பிரசாந்தும் ஆரியை பழிவாங்கத் துடிக்க அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.
‘ரெட்டைச் சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படங்களில் நாயகனாக நடித்த ஆரி, ‘தார்ப்பாய் முருகன்’ கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். நல்ல படமும், கதாபாத்திரமும் வந்தால்தான், ஒவ்வொருவராலும் திறமையை வெளிப்படுத்த முடிகிறது. மூக்கு மேல கோபத்தை வைத்திருக்கும் கதாபாத்திரம். எதையும் செய்து முடிக்கும் தைரியம். யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடத் துடிக்கும் தெனாவெட்டு என ‘தார்ப்பாய் முருகன்’ காட்சிக்குக் காட்சி நடிப்புப் படிக்கட்டுகளில் மேலே மேலே தாவுகிறார்.
புதுமுக நாயகி ஷிவதாவின் அந்த இரண்டு கண்கள் மட்டுமா நடித்திருக்கின்றன…..?….படம் முழுவதும் பாவாடை, சட்டையிலேயே பவனி வர வைத்து பச்சைப் புள்ளைகளின் மனதைக் கெடுக்கிறார் இயக்குனர். அழகும், திமிரும் இளமையும் மட்டுமில்லாமல் தான் நடிப்பிலும் சிறந்தவர் என் நிரூபிக்கிறார் ஷிவதா. ரவுடியான ஹீரோவைக் காதலிக்கும் கதாபாத்திரம்தான் என்றாலும், ஒவ்வொரு காட்சியிலுமே அவருடைய திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
யாருப்பா அந்த இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயணன், ஆரம்ப கால ரஜினியை அப்படியே ஞாபகப்படுத்துகிறார். காவல் துறைக்கே உரிய கம்பீரமான கர்வத்தை கண்முன் நிறுத்துகிறார். பேசாத இடங்களில் பார்வையால் சுடுகிறார். தமிழ் சினிமாவில் உள்ள இளம் வில்லன் நடிகர்களின் வறட்சியைப் போக்கி விடுவார்.
மலையாள நடிகர் சலீம்குமார், திருட்டுப் பொருட்களை வாங்கி விற்கும் ஒரு புரோக்கர், சூது வாது என்றால் எப்படி இருக்கும் என்பதை அவரது கதாபாத்திரத்தின் மூலம் விளங்க வைக்கிறார்.
தாபா கடை மாஸ்டர் தம்பி ராமையா, அவரது அசிஸ்டென்ட் மாஸ்டர் கென் கருணாஸ், சலீம்குமாரின் கைத்தடி அஸ்வின் அருமையான துணைக் கதாபாத்திரங்கள்…அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறார்கள்.
சத்யாவின் இசையில் பின்னணி இசை அருமை, பாடல்கள் கேட்கக் கேட்க ரசிக்க வைக்கும் ரகம். ராஜவேலின் ஒளிப்பதிவு நெடுஞ்சாலை இரவுகளை கதையை மீறாமல் இருந்து கவனிக்க வைக்கிறது.
வேகமாக பயணிக்கும் லாரியிலிருந்து சர்வ சாதாரணமாக பொருட்களைக் கடத்தும் காட்சிகளையும், சாதாரண விஷயத்திற்குக் கூட பிரசாந்த் நாராயணன் துப்பாக்கியை எடுத்து கண்டபடி சுடுவதையும் சினிமாத்தனமில்லாமல் முடிந்தவரை இயல்பாகக் காட்டியிருக்கலாம். ஆரிக்கும், ஷிவதாவுக்கும் இடையே காதல் பற்றிக் கொள்வது மனதை ஊடுருவவில்லை…
இருந்தாலும், ‘நெடுஞ்சாலை’யில் பயணிப்பதே ஒரு சுகானுபம்தானே…
நெடுஞ்சாலை – லாரிப் பயணம்…
